சிறுபாசன கண்மாய்கள், ஊருணிகளில் குடிமராமத்து பணி; கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்


சிறுபாசன கண்மாய்கள், ஊருணிகளில் குடிமராமத்து பணி; கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் குடிமராமத்து திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

முதல்-அமைச்சர் நிலத்தடி நீர் அளவினை மேம்படுத்தும் வகையிலும், மழை நீரை வீணாக்காமல் சேமிக்க ஏதுவாகவும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டப்பணிகளின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37 கோடியே 59 லட்சம் மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கங்களின் மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஊராட்சி அளவில் உள்ள சிறு பாசன கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,112 சிறு பாசன கண்மாய்களும், 3,464 ஊருணிகளும் உள்ளன. இவற்றில் குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ள 224 சிறுபாசன கண்மாய்களும், 988 ஊருணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு சிறு பாசன கண்மாய்க்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலும், ஊருணிகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ரூ.21 கோடியே 8 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து பரமக்குடி யூனியன் நெல்மடூர் ஊராட்சியில் உள்ள ஆவுடையாச்சி ஊருணி, முதுகுளத்தூர் யூனியன் பொசுக்குடிப்பட்டி ஊராட்சியில் உள்ள சத்திர ஊருணி ஆகியவற்றில் குடிமராமத்து திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கிராம அளவில் உள்ள சிறு பாசன கண்மாய்கள் மற்றும் ஊருணிகளிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்பணிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிறு பாசன கண்மாய்களில் மற்றும் ஊருணிகளில் முறையே தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்துவதோடு அதிகஅளவில் பயன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நவாஸ்கனி எம்.பி., சதன்பிரபாகர் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, மிக்கேல்பட்டினம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எம்.ஏ.முனியசாமி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவகாமி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உள்பட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story