சிவகாசி நகரின் மையப்பகுதியில் பாலம் அமைக்கும் பணி தாமதம்; பள்ளி மாணவர்கள் அவதி


சிவகாசி நகரின் மையப்பகுதியில் பாலம் அமைக்கும் பணி தாமதம்; பள்ளி மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 18 Aug 2019 10:30 PM GMT (Updated: 18 Aug 2019 9:24 PM GMT)

சிவகாசி நகராட்சி பகுதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சிவகாசி,

சிவகாசி நகரின் மையப்பகுதியில் உள்ள பி.எஸ்.ஆர். ரோட்டில் கழிவுநீர் செல்லும் கால்வாய் சேதம் அடைந்து கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடியது. இதை தொடர்ந்து அந்த கால்வாயை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கம்யூனிஸ்டு கட்சிகள் இது தொடர்பாக போராட்டம் செய்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சரி செய்து அந்த பகுதியில் பாலம் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதை தொடர்ந்து பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது முதல்கட்ட பணியிலேயே இருக்கிறது. 1 மாதத்தில் பாலத்தை கட்டி முடித்து அந்த பகுதியில் சேதம் அடைந்து கிடக்கும் சாலையை சீரமைத்து தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 15 நாட்கள் ஆன நிலையில் முதல் கட்ட பணிகள் கூட முடியாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பகுதியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் தற்போது பாலம் அமைக்கும் பணியால் அவர்கள் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் மாற்று பாதைகள் வழியாக பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மழைக்காலம் தொடங்கி விட்டதால் சேதம் அடைந்த சாலையின் வழியில் செல்லும் மாணவர்கள் மிகுந்த அவதிக்கு பின்னர் தான் பள்ளிக்கு செல்லவேண்டி இருக்கிறது.

பாலம் அமைக்க வசதியாக அந்த பகுதியில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை அந்த பகுதியிலேயே கொட்டி வைத்து இருப்பதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக இருக்கிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றால் தற்போது நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story