ஓசூர் அருகே பயங்கரம், கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை - 2 பேர் கைது - பிரபல ரவுடிக்கு வலைவீச்சு


ஓசூர் அருகே பயங்கரம், கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை - 2 பேர் கைது - பிரபல ரவுடிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Aug 2019 3:45 AM IST (Updated: 19 Aug 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் பிரபல ரவுடியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி கொத்தனூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் விஜயகுமார் (வயது 31). கார் டிரைவர். இவரது மனைவி ரோஜா (25). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

விஜயகுமாரும், ஓசூர் தாலுகா நஞ்சாபுரத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவரின் மகன் மஞ்சுநாத் (33) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் மஞ்சுநாத் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு விஜயகுமாரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றார். ஆனால் அவர் அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. பல முறை விஜய குமார் கொடுத்த பணத்தை கேட்டும், மஞ்சுநாத் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை விஜயகுமார், நஞ்சாபுரத்தில் உள்ள மஞ்சுநாத்தின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த மஞ்சுநாத்தின் நண்பரான கொத்தூரை சேர்ந்த சுக்கிரவன் என்பவர் தான் வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை சரமாரியாக குத்தினார்.

இதில் விஜயகுமாருக்கு இடதுபுற கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதற்கு நஞ்சாபுரம் மஞ்சுநாத் மற்றும் ஓசூர் சிப்காட் அடுத்த சின்ன எலசகிரியை சேர்ந்த நாகப்பா என்பவரின் மகன் மஞ்சுநாத் (33) ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயகுமாரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய குமார் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று, கொலையுண்ட விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக விஜயகுமாரின் மனைவி ரோஜா, மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நஞ்சாபுரம் மஞ்சுநாத், சின்ன எலசகிரி மஞ்சுநாத் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே போல தலைமறைவான சுக்கிரவனும் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது இரட்டைக்கொலை உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story