பால் விலையை உயர்த்தியது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்


பால் விலையை உயர்த்தியது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:45 AM IST (Updated: 19 Aug 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பால் விலையை உயர்த்தியது ஏன்? என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓமலூர் காமலாபுரம் விமானம் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் பால் விற்பனை விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி இருக்கிறீர்கள். இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதே?

பதில்:- ஏற்கனவே எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் பால் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு, நான் சட்டமன்றத்தில் பதில் தெரிவித்தேன். அதாவது, பால் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை ஏற்று அரசு விரைவில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும். அதேவேளையில் விற்பனை விலையும் உயர்த்தப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்தேன்.

மேலும், பால் உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து, கோரிக்கை வைத்தார்கள். நீங்கள் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தீர்கள். இன்னும் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லையே? என்று கோரிக்கை வைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் பால் உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து கூறும்போது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி 5 ஆண்டு காலம் ஆகிறது. இன்னும் உயர்த்தப்படவில்லை. கடந்த 5 ஆண்டு காலத்தில் கால்நடைகளுக் கான தீவனங்களின் விலை, பராமரிப்பு செலவு போன்றவை அதிகரித்துள்ளது. எனவே அரசு பால் கொள்முதல் விலையை அதிகளவில் உயர்த்த வேண்டும் என கேட்டார்கள்.

இதனால் விற்பனை விலையும், கொள்முதல் விலையையும் கணக்கிட்டு அரசு, பசும்பாலுக்கு ரூ.4-ம், எருமை பாலுக்கு ரூ.6-ம் விலை உயர்த்தி இருக்கின்றது. பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. சில சங்கங்கள் மட்டும் தான் லாபத்தில் இயங்குகின்றன. இருந்தாலும் அரசு இதையெல்லாம், சமாளித்து இன்றைக்கு சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு போக்குவரத்து கட்டணம் உயர்ந்து இருக்கிறது. டீசல் விலை உயர்வு காரணமாக, பாலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வதற்கான கட்டணம் எல்லாம் உயர்ந்து இருக்கின்றது. இதை கருத்தில் கொண்டு தான் அரசு இந்த விலையை நிர்ணயம் செய்து இருக்கின்றது.

கேள்வி:- கர்நாடகாவில் பால் கூட்டுறவு சங்கத்திற்கு ஊக்கத்தொகை கூடுதலாக ரூ.6 வழங்குகிறார்கள்?

பதில்:- இது தவறான செய்தி. உண்மையான நிலவரப்பட்டியல் என்னிடம் இருக்கிறது. அது கர்நாடகாவில் லிட்டருக்கு ரூ.29.72, ஆந்திராவில் ரூ.28.13, தெலுங்கானாவில் ரூ.27.30, குஜராத்தில் லிட்டருக்கு ரூ.30.37 ஆகும். இவை எல்லாவற்றையும் விட தமிழகத்தில் தான் இன்றைக்கு பால் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை ஏற்று லிட்டருக்கு ரூ.32 நிர்ணயித்து இருக்கிறோம்.

கேள்வி:- பால் விலையை உயர்த்தியதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்களே?

பதில்:- பால் விலையை உயர்த்தி 5 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு விலைவாசி உயர்ந்து இருக்கின்றது? இது அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு சம்பள விகிதம் எல்லோருக்கும் உயர்ந்து இருக்கின்றது. அதைபோல் தொழிலாளர்களுக்கும் கூலி உயர்ந்துள்ளது. எல்லோருக்கும் உயர்வு இருக்கின்றபோது பால் உற்பத்தியாளர்களுக்கும் விலையை உயர்த்தி தானே கொடுக்க வேண்டும்.

பல தரப்பட்ட விவசாயிகளுக்கு இன்றைக்கு கால்நடை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. சில நேரங்களில் கால்நடைகள் எல்லாம் நோய்களால் தாக்கப்படுகின்றது. இதில் தாக்குப்பிடித்து அந்த கால்நடைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. அப்படி நோய் தாக்கும்போது பால் உற்பத்தி குறைந்து விடுகிறது. இதையெல்லாம் கவனத்தில் எடுத்து கொண்டு தான் அரசு தீவிரமாக பரி சீலித்து இந்த விலையை உயர்த்தி இருக்கிறது.

கேள்வி:- தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக குறைக்கப்படுமா?

பதில்:- நாங்கள் ஏற்கனவே படிப்படியாக மதுவிலக்கை குறைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் குறைத்து கொண்டே இருக்கின்றோம்.

கேள்வி:- தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மழை வெள்ள பாதுகாப்பு நட வடிக்கை என்ன மாதிரி இருக்கிறது?

பதில்:- ஏற்கனவே தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி அதில், கனமழை பெய்கின்ற இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்ட கலெக்டருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கின்றன.

கேள்வி:- மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது?

பதில்:- டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை கணக்கிட்டு தான் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. டெல்டா பாசன பகுதியில் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. முதற்கட்டமாக தண்ணீர் விடுகிறோம். இந்த தண்ணீர் போன உடனேயே விவசாயிகள் அதை பயன் படுத்துவதில்லை. அதாவது விவசாயிகள் முதலில் நாற்று நடுவார்கள். அதன்பிறகு தான் அதை எடுத்து நடவு செய்வார்கள். ஒரு வாரம் கழித்து விவசாயிகளுக்கு எவ்வளவு தண்ணீர் கூடுதலாக தேவையோ? அந்த அளவிற்கு தண்ணீர் திறக்கப்படும்.

கேள்வி:- புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் வெளிப்படை தன்மை இல்லை? என கல்வியாளர்கள் கூறுகிறார்களே?

பதில்:- இது தவறானது. வெளிப்படை தன்மையோடு தான் அரசு புதிய கல்வி கொள்கையை அறிவித்தது. அதை ஒன்றும் மறைத்து செய்வது கிடையாது. யாருக்கும் தெரியாதது ஒன்றும் கிடையாது. இந்த புதிய கல்வி கொள்கை மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் தமிழக அரசை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு கல்வி கொள்கையிலே திடமாக இருக்கின்றது. மொழிக்கொள்கையிலே பார்த்தால் இருமொழிக்கொள்கையை பின்பற்றப்படும் என சுதந்திர தின விழாவில் நான் தெளிவுபடுத்தி இருக்கின்றேன்.

கேள்வி:- தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் பிரிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் சொல்லியிருக்கிறாரே?

பதில்:- நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு இருப்பீர்கள். அதற்கு அவர் அப்படி பதில் சொல்லி இருப்பார். அதாவது, பெரிய மாவட்டங்கள் எல்லாம் 2 ஆக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் கோரிக்கை வந்தது. அதன் அடிப்படையில் பெரிய மாவட்டங்கள் எல்லாம் முதலில் பிரிக்கப்படுகின்றது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக சேலம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதேபோல் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாஜலம், வெற்றிவேல், சக்திவேல், மனோன்மணி, ராஜா, சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் மற்றும் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story