ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது


ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
x
தினத்தந்தி 18 Aug 2019 11:30 PM GMT (Updated: 18 Aug 2019 11:13 PM GMT)

புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு புதுவை மட்டுமில்லாமல் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்குள்ள நிர்வாக பிரிவில் ஊழியர்களை நியமித்தது தொடர்பாகவும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ள தாகவும் ஊழியர்கள் சங்கம் சார்பில் சி.பி.ஐ.க்கு புகார்கள் அனுப்பப்பட்டன.

இதனை தொடர்ந்து சென்னை சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் பாமா தலைமையில் அதிகாரிகள் புதுவை வந்தனர். அவர்கள் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள நிர்வாக பிரிவு அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் முக்கிய கோப்புகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனையின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர். நேற்று முன்தினம் சோதனையை முடித்து சென்ற அவர்கள் மீண்டும் புதுவைக்கு வந்து சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story