வாழப்பாடி பகுதியில், மர்ம விலங்குகள் கடித்ததில் 5 ஆடுகள் செத்தன


வாழப்பாடி பகுதியில், மர்ம விலங்குகள் கடித்ததில் 5 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 19 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி பகுதியில் மர்ம விலங்குகள் கடித்ததில் 5 ஆடுகள் செத்தன. இதனால் கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.

வாழப்பாடி, 

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், ஆடு, கறவைமாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வாழப்பாடி பேரூராட்சியில் தனியார் தொழிற்பயிற்சி மையத்திற்கு பின்பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வளர்த்து வந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறி தின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில், ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்குகளை, வாழப்பாடி வனத்துறையினர் கூண்டு தயார் செய்து அதற்குள் ஆட்டுக்குட்டியை கட்டி வைத்து பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மர்ம விலங்கு பிடிபடவில்லை.

இந்நிலையில், வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம், குமாரசாமியூர், மேலூர், மாரியம்மன்புதூர் ஆகிய கிராமங்களில் மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் செத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில், குமாரசாமியூர் கிராமத்தில் இரவு நேரத்தில் மீண்டும் மர்ம விலங்குகள் நடமாடின. இந்த கிராமத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., பழனிசாமி, ராஜேந்திரன், சின்னதம்பி உள்ளிட்ட விவசாயிகள் வளர்த்து வரும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம விலங்குகள் வேட்டையாடி தின்றன.

இந்நிலையில் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம விலங்குகள், விவசாயி ராஜேந்திரன் என்பவர் வளர்த்து வந்த 5 ஆடுகளை கடித்து ரத்தத்தை குடித்து கொன்றன. மேலும் காயமடைந்த 2 ஆடுகள் உயிருக்கு போராடி வருகின்றன.

இதனால் பீதியடைந்துள்ள கால்நடை வளர்ப்போர், ஆடுகளை வேட்டையாடி வரும் மர்ம விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்குகளுக்கு பலிகொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story