அந்தியூர் அருகே தூக்குப்போட்டு டி.வி. மெக்கானிக் தற்கொலை


அந்தியூர் அருகே தூக்குப்போட்டு டி.வி. மெக்கானிக் தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2019 3:45 AM IST (Updated: 19 Aug 2019 8:27 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தூக்குப்போட்டு டி.வி. மெக்கானிக் தற்கொலை செய்துகொண்டார்.

அந்தியூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). டி.வி. மெக்கானிக். இவருடைய மனைவி வெண்ணிலா (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பொம்மன்பட்டியில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

சில நாட்கள் தனியாக வசித்த சிவக்குமார் கடந்த 2 வாரத்துக்கு முன்பு பொம்மன்பட்டிக்கு வந்து மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். பின்னர் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டனர். நேற்று காலை வெண்ணிலா எழுந்து பார்த்தார். அப்போது வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்குப்போட்டு சிவக்குமார் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா, வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story