குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் அறிவுறுத்தினார்.

மூலக்குளம்,

புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வடக்கு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறைகேட்பு மற்றும் புத்துணர்ச்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் (கோரிமேடு), சண்முகசுந்தரம் (மேட்டுப்பாளைம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர் உசேன், கீர்த்தி, வீரன், இனியன், வீரபுத்திரன், கலையரசன், குமார், ராஜேஸ்வரி மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர். அப்போது போலீசார் தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் சிறு பிரச்சினைகள் கூட இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசாரையும் பாராட்டுகிறேன். நீங்கள் தெரிவித்துள்ள குறைகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு தெரிவித்து, தீர்வு காணப்படும்.

கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை, விபசாரம் உள்ளிட்டவை குறித்து புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். போலீஸ் நிலையங்களை எப்போதும் சுத்தமாகவும், தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story