கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த கிராம மக்கள்


கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:15 PM GMT (Updated: 19 Aug 2019 5:30 PM GMT)

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள அரசகுடும்பன்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்கள் கிராமத்தில் பல மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாகவும், இது பற்றி பஞ்சாயத்து அலுவலகத்திலும், யூனியன் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தினசரி 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டி உள்ளதால் பெண்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ஒரு குடம் தண்ணீர் ரூ.15 விலை கொடுத்து வாங்குவதாகவும், கால்நடைகளுக்கு கூடதண்ணீர் கிடைக்காதநிலை இருந்து வருவதாகவும், ஊரில் உள்ள உப்பு தண்ணீரை குடித்தால் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

தங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் வந்த அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த போலீசார் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சிவகாசி யூனியன் செங்கமலப்பட்டி ஊராட்சியில் உள்ள முருகன் காலனி, கோட்டமலை காலனி ஆகிய பகுதிகளில் 8 நாட்களுக்கு ஒரு முறை உப்பு தண்ணீர் வழங்கப்படுவதாகவும், விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை இருந்து வருவதாகவும், இது பற்றி பஞ்சாயத்தில் புகார் செய்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும், குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

தேசமக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பரத்ராஜா கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ரோசல்பட்டி பஞ்சாயத்தில் மயானத்துக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து உள்ளதாகவும், மழைக்காலத்திற்கு முன்பு இந்த சாலையை சீரமைத்து தருமாறும் கோரிஉள்ளார்.

விருதுநகர் மாவட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர் டேனியல் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், சிவகாசி பாரதிநகரில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார்.

Next Story