கிராமப்புறங்களில் 100 நாள் வேலை வழங்க அதிகாரிகளின் நடவடிக்கை தேவை - மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்


கிராமப்புறங்களில் 100 நாள் வேலை வழங்க அதிகாரிகளின் நடவடிக்கை தேவை - மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:15 AM IST (Updated: 19 Aug 2019 11:51 PM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் பெண்களுக்கு வாழ்வாதாரமாக விளங்ககூடிய 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

விருதுநகர்,

விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூர் நேற்று விருதுநகர் யூனியனில் உள்ள சத்திரரெட்டியபட்டி, புல்லலக்கோட்டை, சிவஞானபுரம், வடமலைக்குறிச்சி, பாவாலி ஆகிய கிராமங்களுக்கு சென்று கிராம மக்களை சந்தித்தார். அப்பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராமப்புற பெண்கள் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இது வரை 50 நாட்கள் கூட வேலை வழங்க வில்லை என்றும், வேலை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். 100 நாட்கள் வேலை கிடைக்காததால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் அவர்கள் புகார் கூறினர்.

இதைத் தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி., பஞ்சாயத்து செயலரிடம் 100 நாட்கள் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன், என கேட்டார். நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது சாலை சீரமைப்பு, வாருகால் அமைப்பு போன்ற பணிகளையும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கணக்கெடுத்து 100 நாட்களும் முழுமையாக வேலை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி. வலியுறுத்தினார்.

சாலைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை என்றும், குடிநீர் சீராக வழங்கப்பட வில்லை என்றும் சில கிராமங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டு வழங்க கோரியும் கிராமத்து பெண்கள் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி. அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின் போது விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

Next Story