சென்னசமுத்திரம் அருகே சிட்டப்புள்ளாம்பாளையத்தில் சாக்கடை கலந்து வரும் குடிநீர் - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்


சென்னசமுத்திரம் அருகே சிட்டப்புள்ளாம்பாளையத்தில் சாக்கடை கலந்து வரும் குடிநீர் - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:45 AM IST (Updated: 20 Aug 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னசமுத்திரம் அருகே சிட்டப்புள்ளாம்பாளையத்தில் சாக்கடை கலந்து வரும் குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஈரோடு,

கொடுமுடி தாலுகாவுக்கு உள்பட்டது சென்னசமுத்திரம் பேரூராட்சி. இங்கு சிட்டப்புள்ளாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு வினியோகம் செய்யப்படும் தண்ணீர் நேற்று சாக்கடை கலந்தது போன்று கருப்பு நிறத்தில் வந்தது. அதுமட்டுமின்றி அந்த தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குடிக்க வேறு தண்ணீர் இல்லாததால் ஊர் எல்லையில் உள்ள குழாயில் இருந்து குடங்களில் தண்ணீர் சுமந்து சென்றனர்.

இதுகுறித்து அந்ந பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட எங்கள் கிராமம் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் முறையாக கிடைப்பதில்லை. காவிரி நீர் போதுமானதாக இல்லை. எனவே தினமும் ஊர் முக்கிய சாலையில் பள்ளிக்கூடம் அருகே உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து, தலையில் வைத்தும், சைக்கிள்களில் கட்டியும் கொண்டு வருகிறோம்

இந்த நிலையில் தற்போது காவிரியில் இருந்து வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சாக்கடை கலந்து வருகிறது. இதை பயன்படுத்தவே முடியாது. கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் வருகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரியில் நீரேற்றம் செய்யும் இடத்தில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமலேயே தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதே இதற்கு காரணம். எங்கள் பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று வீடுகளுக்கு குழாயில் வந்த காவிரி குடிநீரை பெண்கள் பாட்டில்களில் பிடித்து காட்டினார்கள். கருப்பு நிறத்தில் கலங்கலாக இருந்த தண்ணீர் சிறிது நேரத்தில் தெளிந்து லேசான கருப்பு நிறத்தில் மாறியது ஆனால் பாட்டிலில் பாதி அளவுக்கு சகதிபோல அழுக்கு சேர்ந்து இருந்தது. அந்த தண்ணீரை குடிக்கமட்டுமல்ல, கையால் தொடக்கூட முடியாது. எனவே குடிநீரை சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும் என்பதே சிட்டப்புள்ளாம்பாளையம் மக்களின் கோரிக்கையாகும்.

Next Story