கோபி கலிங்கியம் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றம்; நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கோபி கலிங்கியம் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றம்; நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Aug 2019 5:00 AM IST (Updated: 20 Aug 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

கோபி கலிங்கியம் பகுதியில் செயல்படும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

நாங்கள் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் விவசாயம் தான் முக்கிய தொழில். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று எங்கள் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் பிளாஸ்டிக் குழாய் உற்பத்தி செய்யும்போது, அதிக அளவிலான நச்சுவாயு வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது. இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம்.

அதன் பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 14-ந்தேதி மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு தற்போது தொழிற்சாலை இயங்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கிழக்கூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 100 ஆண்டுகளாக மழை நீர் தேங்கி நிற்கும் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில், சிலர் துணி துவைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது நீர்வரத்து குறைந்ததாலும், கழிவுநீர் குட்டையில் கலப்பதாலும் தண்ணீர் மாசு அடைந்து பன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

மேலும் அந்த குட்டையை சிலர் உரிமை கொண்டாடி வருகிறார்கள். எனவே குட்டையை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி நாங்கள் மீண்டும் அந்த குட்டையில் துணி துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘சட்ட விரோதமாக பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு ஆசிரியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது திடக்கழிவு மேலாண்மை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மை அமைத்தால், துர்நாற்றம் காரணமாக வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் மொத்தம் 343 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 565 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ -மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.

கூட்டத்தில் துணை கலெக்டர் (பயிற்சி) சிந்துஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story