சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடக்கம், கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம்
‘தமிழகம் முழுவதும் கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்’ என்று வனவாசியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். இதன்மூலம் நகரங்களில் வார்டுகளிலும், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வு காண ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம் வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடக்க விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் சண்முகம் வரவேற்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் சத்தியகோபால், கலெக்டர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அவர் 558 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களின் குறைகளை விரைவாக தீர்ப்பதற்காக முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும் என்பதையும், மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை கொடுத்து கொண்டிருக்கின்றது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாசில்தார் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் தற்போது நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த குறைதீர் முகாம்களில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு எடுத்து வரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தினை அரசு செயல்படுத்தி இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தொடங்கப்பட்டுள் ளது. அதன் அடிப்படையில் இதன்மூலம் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று, தீர்வு காண, முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டுமென்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகர்புற வளர்ச்சி துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்டு மாத இறுதிக்குள் சென்று மனுக்களை பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மனுக்களின் மீதான தீர்விற்குபின், செப்டம்பர் மாதத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர் தலைமையில் வட்ட அளவிலான விழாக்களும் நடத்தப்படும். பல்வேறு நலத்திட்ட பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படை தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின்போது தீர்வு காணப்படும்.
மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான திட்டமாக திகழும் இந்த சிறப்பு திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.76 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இதுபோன்ற மிகப்பெரிய திட்டத்தை எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நான் தொடங்கி வைத்ததின் மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய, நடுத்தர மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். தலைமை செயலாளர் தெரிவித்ததை போல, இன்றைக்கு மக்கள் அதிகாரிகளை அணுகுவதைக்காட்டிலும், அதிகாரிகளே மக்களை நாடி மக்களிடம் மனுக்களை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்த திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு சென்று மக்களை நேரிடையாக சந்திக்க உள்ளார்கள். முதல்-அமைச்சர் என்ற முறையில் 234 தொகுதிகளில் இருக்கின்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இருந்தாலும், அவ்வப்போது நான், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு வந்து, மக்களை சந்தித்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறேன். நான் எங்கே சென்றாலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எப்பொழுதும் தனி கவனம் செலுத்தி கொண்டிருக்கின்றேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 2011-ம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடும்பொழுது, மக்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொண்டிருக்கின்றேன். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரூ.146 கோடி மதிப்பீட்டில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நங்கவள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்களை நியமித்து, 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தி, கட்டிடங்கள் கட்டி கொடுத்து தேவையான வசதிகளையும் செய்து தரப்பட்டுள்ளது.
இதுதவிர, சவுரியூரில் புதிய அரசு மருத்துவமனை, வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம், ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள், நங்கவள்ளியில் தீயணைப்பு நிலையம் மற்றும் பேருந்து நிலையம், கோவை, பெங்களூரூ, ஈரோடு செல்வதற்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி, சவுரியூரில் மாதிரிப்பள்ளி, சின்னச்சோரகையில் உயர்நிலைப்பள்ளி என பல்வேறு திட்டங்கள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லா வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மற்றும் கைத்தறி, விசைத்தறிக்கு விலையில்லா மின்சாரம் கொடுக்கின்ற அரசு எங்கள் அரசு. மேட்டூரிலிருந்து வருகின்ற உபரிநீரை ஏரிகளில் நிரப்பவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்காக ரூ.565 கோடியில் 100 ஏரிகளில் உபரிநீரை நிரப்பப்படுகின்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 234 தொகுதிகள் இருந்தாலும், எடப்பாடி தொகுதியில் இருப்பவர் தான் முதல்-அமைச்சராக இருக்கிறார். இந்த முதல்-அமைச்சரை உருவாக்கியவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்ற பொதுமக்கள். நீங்கள் ஓட்டுபோட்டு, சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த காரணத்தினால் தான், இன்றைக்கு இந்த நிலையில் இருந்து உங்கள் முன்பு பேசி கொண்டிருக்கிறேன்.
பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் நல்ல விளைச்சல் ஆகின்ற பகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கு மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. ஓமலூர்-தாரமங்கலம் இடையில் புதிதாக காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் ரூ.2 ஆயிரம் கோடியில் மிகப்பெரிய உணவு பூங்கா ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் நமது விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளுக்கு கட்டுப்படியான, நியாயமான விலை கிடைக்கும்.
விவசாயிகள், கால்நடை வளர்ப்பை உபதொழிலாக வைத்திருக்கிறார்கள். அந்த கால்நடை வளர்ப்பு சிறக்க வேண்டும் என்பதற்காக ஆசியாவிலேயே மிக உன்னதமான கால்நடை பூங்கா சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் 1,200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. அங்கு கால்நடை மருத்துவமனை, கால்நடை ஆராய்ச்சி நிலையம் மூலம் கலப்பின பசுக்கள் உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்கப்படும். ஆடுகள், பன்றிகள், மீன், கோழிகள் வளர்த்து கொடுத்து, விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தி பெருக்குவதை கருத்தில் கொண்டு, ஊட்டியில் விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் ரூ.47½ கோடியில் அமைக்கப்பட உள்ளது. அரசாங்கம் எத்தனை திட்டங்களை போட்டாலும், அதை நடைமுறைப்படுத்த கூடியவர்கள் அதிகாரிகள். ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் என்றால், ஒன்று அரசு, மற்றொன்று அரசு அதிகாரிகள் ஆகும். இந்த இரண்டும் சரியாக இருந்தால் தான் இலக்கை அடைய முடியும். அதனால், அரசாங்கம் போடுகின்ற திட்டத்தை அரசு அதிகாரிகள் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் கடமை. கஜா புயல் வந்த போது கடுமையான சேதம் ஏற்பட்டது. ஆனால் அதன் அடிச்சுவடே தெரியாத அளவிற்கு அந்த இடத்தை மாற்றிவிட்டார்கள். அந்த அளவிற்கு அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு இன்றைக்கு அந்த பணிகளை எல்லாம் நாங்கள் நிறைவேற்றி தந்திருக்கிறோம்.
கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகின்றோம். இந்தியாவிலேயே, வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வறட்சி நிவாரணங்கள் அளித்தல், பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிக காப்பீட்டு தொகையை பெற்று கொடுத்தல் என விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது எங்கள் அரசு தான்.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்த ஆட்சி 10 நாள் தாக்குப் பிடிக்குமா? ஒரு மாதம் தாக்கு பிடிக்குமா? அல்லது 6 மாதம் தாக்குப் பிடிக்குமா? என்று சொன்னார்கள். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்து, 3-வது ஆண்டில் வீறுநடையுடன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முழு காரணம் மக்களும், அதிகாரிகளும் தான். உங்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த ஆட்சி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றது. அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதற்கு உங்களுடைய ஆதரவும், அன்பும் தான் காரணம்.
நகரத்தில் வாழ்கின்ற மக்களுக்கும் தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி என அனைத்து பகுதிகளுக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலமாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து, வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் வீடில்லா மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுத்து கொண்டிருக்கின்றோம்.
பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும். வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் வீட்டு மனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். வயது முதிர்வால் உழைக்க முடியாத முதியோர்களுக்கு முதியோர் உதவி தொகை திட்டத்தை அரசு செயல்படுத்தி கொண்டிருக்கின்றது. இதன்மூலம், புதிதாக, தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். காப்பீட்டு திட்டம் இல்லாதவர்கள் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவர். ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு, ரூ.2 லட்சமாக இருந்த காப்பீட்டு தொகை தற்பொழுது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆகவே, மக்களுக்கு தேவையான, மருத்துவ வசதி, விவசாயிகளுக்கு தேவையான உதவிகள், குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. இதுபோன்ற காரணங்களினால், விவசாயம் மேம்படுவதோடு தொழில் வளம் பெருகுகின்றது. கைத்தறி, விசைத்தறி நெசவுத்தொழில் சிறந்து விளங்குகின்றது. எனவே, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து எடப்பாடியிலும், கொங்கணபுரத்திலும் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், வெற்றிவேல், ராஜா, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல்-அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
Related Tags :
Next Story