குமாரபாளையம் காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நாமக்கல்,
தமிழ்நாடு விஷ்வஇந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்து வருபவர் சபரிநாதன். இவர் நேற்று விஷ்வஇந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் மீனவர்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாணார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் எந்திரம் மூலமாக மணல் அள்ளப்படுகிறது. தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மணல் அள்ளப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனவே தாங்கள் தலையிட்டு, ஆற்று மணலையும், கனிம வளத்தையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மற்றொரு மனுவில் கூறியிருப்பதாவது:-
பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ஆண்டுதோறும் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்கு 24 விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அளித்து இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் ஒற்றைசாளர விதிமுறையின் கீழ் எங்களுக்கு சிலை வைப்பதற்கு அனுமதி அளித்து உள்ளார். எனவே முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க ஒற்றை சாளர முறையில் அனுமதி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story