கூடலூரில், கடைகளுக்குள் புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - போலீசில் வியாபாரிகள் மனு
கூடலூரில் கடைகளுக்குள் புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் வியாபாரிகள் மனு அளித்தனர்.
கூடலூர்,
கூடலூர் ஐந்துமுனை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் விஜி(வயது 25) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் விஜி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்குள் புகுந்த ஆசாமி ஒருவர் விஜியை தாக்கினார். இதை தடுக்க முயன்ற கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த ஆசாமி அங்கிருந்து சென்றார். இது குறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தாக்குதல் தொடர்பாக கூடலூர் காசிம்வயலை சேர்ந்த பாபு(வயது 45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கூடலூர் அனைத்து வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் கிருஷ்ண பிரதாபன் தலைமை தாங்கினார். செயலாளர் அமர்கான், தொகுதி செயலாளர் ரசாக் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த 3, 17, 18-ந் தேதிகளில் பல கடைகளுக்குள் புகுந்து உரிமையாளர்கள், ஊழியர்களை தாக்கிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவறும்பட்சத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அக்பர்கான், சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோரை சந்தித்து முறையிட்டனர்.
அதைத்தொடர்ந்து புகார் மனு அளித்தனர். அதில் கூடலூர் நகரில் கடைகளுக்குள் புகுந்து வியாபாரிகள், ஊழியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நபர்களை கைது செய்ய வேண்டும். மேலும் வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. பின்னர் புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை ஏற்று வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story