துறையூர் அருகே விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்


துறையூர் அருகே விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன்(வயது 65). சிறை வார்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், தனது மனைவி எழிலரசி(55) மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் துறையூர் அருகே சிறுநாவலூர்புதூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் முப்பூசை விழாவிற்கு ஒரு சரக்கு வேனில் சென்றனர். சரக்கு வேனில் டிரைவர் உள்பட மொத்தம் 17 பேர் பயணம் செய்தனர். எரகுடி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், சாலையோரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் குணசீலன், எழிலரசி மற்றும் பேரூர் கிராமத்தை சேர்ந்த கோமதி, குமாரத்தி, யமுனா, சரண்குமார் மற்றும் கட்டப்பள்ளியை சேர்ந்த கயல்விழி, சஞ்சனா ஆகிய 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்த 8 பேரின் உடல்களும் துறையூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வாகனங்கள் மூலம் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அமைச்சர்கள் ஆறுதல்

மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்.எல்.ஏ.க்கள் முசிறி செல்வராஜ், மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரிமுருகன் உள்ளிட்டோர் முசிறியை அடுத்த பேரூர் மற்றும் கட்டப்பள்ளி கிராமங்களுக்கு சென்று, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகைக்கான உத்தரவுகளை வழங்கி ஆறுதல் கூறினர்.

முன்னதாக முன்னாள் அமைச்சர்் கே.என்.நேரு, துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார், தே.மு.தி.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் மற்றும் பலர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

குழந்தைகளை இழந்த பெற்றோர்

இந்நிலையில் விபத்தில் இறந்தவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:-

விபத்தில் இறந்த எழிலரசியின் தம்பி இளங்கோவன்(48). இவர் தனது மனைவி முத்துக்கண்ணு(40), குழந்தைகள் யமுனா(10), சரண்குமார்(6), லாவண்யா (8) ஆகியோருடன் சரக்கு வேனில் சென்றுள்ளார். சரக்கு வேன் விபத்தில் சிக்கிய நிலையில் யமுனா, சரண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த இளங்கோவன், முத்துக்கண்ணு, காயமடைந்த லாவண்யா ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலை யமுனா, சரண்குமார் ஆகியோரின் உடல்கள் அஞ்சலிக்காக இளங்கோவனின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இறுதியாக தங்கள் மகள் மற்றும் மகனை பார்ப்பதற்காக இளங்கோவன், முத்துக்கண்ணு ஆகியோர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பேரூர் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதது, கல்நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது.

தாயை இழந்த குழந்தைகள்

இந்நிலையில் அங்கு வந்த அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்டோர் யமுனா, சரண்குமார் ஆகியோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி, இளங்கோவன் குடும்பத்தினருக்கு நிவாரண தொகைக்கான உத்தரவை வழங்கினர். அப்போது அங்கிருந்த உறவினர்கள், ‘யமுனா கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவாள். ஆனால் இன்று அவளுடைய உடலுக்கு கலெக்டரே வந்து அஞ்சலி செலுத்துகிறார்‘ என்று கூறி, கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களில் கோமதி(36), குணசீலனின் மகள் ஆவார். குமாரத்தி(52) குணசீலனின் தம்பி ஞானசீலனின் மனைவி ஆவார். இதில் கோமதிக்கு பேரூரை சேர்ந்த தனபாலுடன் திருமணமாகி, சுகந்தன்(12) என்ற மகனும், யோகிதா(13) என்ற மகளும் உள்ளனர். கோமதி முசிறி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மகன் மற்றும் மகளுடன் சரக்கு வேனில் சென்றார். இதில் கோமதி உயிரிழந்த நிலையில், அவருடைய குழந்தைகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த குணசீலன், எழிலரசி, குமாரத்தி ஆகியோருடைய உடல்கள் அஞ்சலிக்காக குணசீலனின் வீட்டில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

தாய்-மகள்

மேலும் இந்த விபத்தில் இறந்த கயல்விழி(35), கட்டப்பள்ளியை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவர் முருகேசனின் மனைவி ஆவார். பட்டதாரியான கயல்விழி ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தார். இந்த தம்பதிக்கு ஹரீஸ்(5), சஞ்சனா(4) என 2 குழந்தைகள். கயல்விழி தனது குழந்தைகளுடன், பேரூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் விழாவிற்காக உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் குழந்தைகளுடன் மீண்டும் கட்டப்பள்ளிக்கு செல்ல இருந்த நிலையில், குணசீலன் குடும்பத்தினருடன் சிறுநாவலூர்புதூர் கிராமத்திற்கு சரக்குவேனில் செல்வது அவருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அந்த சரக்குவேனில் சிறுநாவலூர் சென்று, அங்கிருந்து அருகே உள்ள கட்டப்பள்ளிக்கு சென்றுவிடலாம் என்று நினைத்து கயல்விழி குழந்தைகளுடன் சரக்கு வேனில் பயணித்துள்ளார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக சரக்கு வேன் விபத்தில் சிக்கியதில் அவரும், அவருடைய மகள் சஞ்சனாவும் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த ஹரீஸ் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட கயல்விழி, சஞ்சனாவின் உடல்கள் சொந்த ஊரான கட்டப்பள்ளிக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அவர்களுடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், மாலை 3 மணியளவில் அவர்களுடைய உடல் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.


Next Story