குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு


குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:30 PM GMT (Updated: 19 Aug 2019 7:34 PM GMT)

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் திரளாக வந்து மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

கீழக்கரை அருகே உள்ள சின்னபாளையரேந்தல் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். சுமார் 200 குடும்பங்கள் வசித்து வரும் எங்கள் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எங்கள் ஊரில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டன.

குடிநீருக்காக எங்கள் ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காவிரி திட்ட கசிவுநீரை பிடித்து வந்து பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் அந்த தண்ணீரையும் அடைத்துவிட்டனர். இதனால் நாங்கள் தண்ணீரை தேடி அலையாய் அலைந்து திரிகிறோம். கூலிவேலைக்கு சென்றுவிட்டு தண்ணீரை தேடி செல்வதே எங்களின் வாழ்க்கையாகிவிட்டது. எனவே எங்கள் ஊரில் அகஸ்தியர் கோவில் அருகில் குடிநீர் குழாய் அமைத்து எங்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல ராமநாதபுரம் அருகே உள்ள தெற்குத்தரவை, சுப்புத்தேவன்வலசை, ஆண்டித்தேவன் வலசை, கொட்டியக்காரன்வலசை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராமத்தினர் திரளாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் எங்கள் கிராமங்கள் உள்ளன. அனைத்து தேவைகளுக்கும் ராமநாதபுரம் வர இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் இப்பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளையர்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. இரவில் இந்த பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் போலீஸ் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி தெருவிளக்குகளும், உயர்மின்விளக்கும் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சின்னபாளையரேந்தல் கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றும் உறுதிஅளித்தார்.

Next Story