எண்ணூரில் மாமூல் கேட்டு தொழிலாளி கடத்தல்; 2 பேர் கைது
எண்ணூரில் மாமூல் கேட்டு கூலித்தொழிலாளியை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
விழுப்புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவர், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாலமுருகன், எண்ணூர் தாழங்குப்பம் பஸ் நிறுத்த நிழற்குடையை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு குடி போதையில் வந்த தாழங்குப்பத்தை சேர்ந்த கிளிண்டன் (25), தினேஷ் (25) ஆகியோர் பாலமுருகனிடம், இங்கு வேலை செய்வதாக இருந்தால் எங்களுக்கு ஒப்பந்ததாரரிடம் பேசி மாமூல் வாங்கி தருமாறு கேட்டனர்.
உடனே பாலமுருகன், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். ஆனால் அவர், மாமூல் தரமுடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிளிண்டன், தினேஷ் இருவரும் கூலித்தொழிலாளி பாலமுருகனை காரில் கடத்திச்சென்றனர்.
மீஞ்சூர் அத்திப்பட்டு அருகே சாலையில் காரை நிறுத்திய அவர்கள், மாமூல் தரவில்லை என்றால் உன்னை விடமாட்டோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் மீஞ்சூர் போலீசார் சிலர் பாலமுருகன் அடைத்து வைக்கப்பட்டிருந்த காரை கடந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் பாலமுருகன், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காருக்கு அருகே வந்தனர். போலீசாரை கண்டதும் கிளிண்டன், தினேஷ் இருவரும் தப்பி ஓடமுயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து, பாலமுருகன் உள்பட 3 பேரையும் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து மாமூல் கேட்டு கூலித்தொழிலாளியை கடத்திய கிளிண்டன், தினேஷ் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story