மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது


மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 20 Aug 2019 4:15 AM IST (Updated: 20 Aug 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

வேலூர், 

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு கடந்த 17-ந் தேதி அறிவித்தது. மேலும் இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இயங்கி வருகிறது. இங்கு 2 மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அவை குளிர்விக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தினமும் 4 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 72 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தினமும் விற்பனையாகிறது. 1,70,000 லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தயிர், மோர், குல்பி ஐஸ் தயாரிக்க 2 ஆயிரம் லிட்டர் பால் செலவிடப்படுகிறது. மீதமுள்ள பால் திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையத்தில் பால் பவுடராக மாற்றப்படுகிறது.

வேலூர் ஆவினில் நீலம், பச்சை, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீல நிற பால் பாக்கெட்டுகள் அரை லிட்டரிலும், பச்சை நிற பால் பாக்கெட்டுகள் 200 மில்லி, அரை லிட்டரிலும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் 1 லிட்டரிலும் கிடைக்கின்றன. விலை உயர்வு காரணமாக ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் உயர்ந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குள் இருப்பது பழைய விலை):- நீல நிற பால் பாக்கெட் அரை லிட்டர் ரூ.21.50 (18.50), பச்சை நிற பால் பாக்கெட் 200 மில்லி ரூ.10.50 (9), அரை லிட்டர் ரூ.23.50 (20.50), ஆரஞ்சு நிற பால் பாக்கெட் ரூ.51 (45)-க்கும் விற்பனையாகின்றன.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏராளமான பால் விற்பனையாளர்கள் உள்ளனர். ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து அவர்களும் பால் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் பால் ஊற்றுபவர்கள் லிட்டருக்கு ரூ.3 முதல் 5 வரை உயர்த்தி உள்ளனர். பால் விலை உயர்வால் ஏழை, எளிய மக்களின் பொருளாதார சுமை மேலும் அதிகரித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story