மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நெல்லை,
நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 45 வயதுடைய மெக்கானிக்கை அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவர்களுடைய 2 மகள்கள் மற்றும் ஒரு மகனை தனது வீட்டில் வைத்து மெக்கானிக் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந் தேதி மெக்கானிக் வீட்டில் இருந்த தனது ஒரு மகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர், போலீசாருடன் மெக்கானிக் வீட்டுக்கு சென்று அந்த சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவளை, மெக்கானிக் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து மெக்கானிக்கை கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து சம்பந்தப்பட்ட மெக்கானிக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் பால்கனி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story