மின்தடையை கண்டித்து துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


மின்தடையை கண்டித்து துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Aug 2019 10:30 PM GMT (Updated: 19 Aug 2019 7:43 PM GMT)

வாணாபுரம் அருகே மின்தடையை கண்டித்து துணை மின்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வாணாபுரம், 

வாணாபுரத்தில் கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, காட்டுவா மரம் பள்ளிக்கூடத் தெரு, கிழக்கு தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சரியாக மின் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் சரியான முறையில் படிக்க முடியாமலும் காலை நேரங்களில் அவர்களுக்கு உணவு செய்து கொடுக்க முடியாமலும் கடும் சிரமப்பட்டு வருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வாணாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சுமார் 11 மணியளவில் வாணாபுரம் அருகில் உள்ள பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் மனு ஒன்றையும் மின்சாரத்துறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

அதில் கடந்த சில மாதங்களாக எங்கள் பகுதிக்கு சரியான முறையில் மின்சாரம் வராததால் நாங்கள் கடும் சிரமப்பட்டு வருகிறோம். இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மின் நிறுத்தம் ஏற்படாமல் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு 1 மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story