நாசரேத் அருகே பட்டப்பகலில் துணிகரம்: பெண்ணை அரிவாளால் வெட்டி 5 பவுன் நகை பறிப்பு


நாசரேத் அருகே பட்டப்பகலில் துணிகரம்: பெண்ணை அரிவாளால் வெட்டி 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 3:45 AM IST (Updated: 20 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே மோட்டர் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பட்டப்பகலில் பெண்ணை அரிவாளால் வெட்டி 5½ பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாசரேத்,

நாசரேத்தை அடுத்த பிரகாசபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 48). இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மளிகை கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பொன்மணி (39). இவர்களுக்கு சதீஷ்குமார் (17), சுரேஷ்குமார் (15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சதீஷ்குமார் ஐ.டி.ஐ. படித்து விட்டு, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சுரேஷ்குமார், நாசரேத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். எனவே பொன்மணி தன்னுடைய இளைய மகனுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

நேற்று காலை 6.30 மணியளவில் பொன்மணி குப்பைகளை கொட்டுவதற்காக, அங்குள்ள கல்லறை தோட்டம் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். பின்னால் அமர்ந்து இருந்தவர் கையில் அரிவாள் வைத்து இருந்தார்.

அவர்கள் திடீரென்று பொன்மணியை வழிமறித்து, அரிவாளை காட்டி நகையை கழற்றி தருமாறு மிரட்டினர். ஆனால் பொன்மணி நகையை தர மறுத்து கூச்சலிட்டார். இதனால் மர்மநபர் அரிவாளால் பொன்மணியின் இடது கையில் வெட்டினார். பின்னர் அவர், பொன்மணி கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த பொன்மணி சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்துரை, நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த புகாரின்பேரில், நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் பெண்ணை அரிவாளால் வெட்டி நகை பறித்த 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story