சாண எருக்குழியில் தவறி விழுந்து இறந்த சிறுமிகள் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி


சாண எருக்குழியில் தவறி விழுந்து இறந்த சிறுமிகள் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி
x
தினத்தந்தி 20 Aug 2019 3:30 AM IST (Updated: 20 Aug 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஒடுகத்தூர் அருகே சாண எருக்குழியில் தவறி விழுந்து இறந்த சிறுமிகளின் உடலுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் அஞ்சலி செலுத்தினார்.

அணைக்கட்டு, 

ஒடுகத்தூரை அடுத்த கே.ஜி. ஏரியூர் தாமோதரன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 37). இவருடைய மனைவி ஷீபா. இவர்களது மகள்கள் ஹரீனா (6), பிரித்திகா (3). கைக்குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில் வீட்டின் அருகே வேல்முருகனுக்கு சொந்தமான நிலத்தில் 5 அடி ஆழ பள்ளத்தில் சாண எருக்குழி ஒன்று உள்ளது. அதில் சாணஎருவைச் சேகரித்து வைத்திருந்தனர். சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 5 அடி ஆழம் உள்ள எருக்குழியில் மழைநீர் தேங்கியிருந்தது. நேற்று முன்தினம் ஹரீனா, பிரித்திகா ஆகியோர் நிலத்துக்கு சென்றபோது சாண எருக்குழிக்குள் தவறி விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களின் உதவியுடன் எருக்குழியில் இருந்த 2 சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடித்து சிறுமியின் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வேல்முருகனின் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று காலை 7 மணிக்கு சம்பவம் நடத்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் நிலத்தில் உள்ள எருக்குழியை மூடும்படி தாசில்தார் பெருமாள் மற்றும் வருவாய்த் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து 2 சிறுமிகளின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கலெக்டர் சண்முகசுந்தரம் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத்தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story