விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
விளாத்திகுளத்தில் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. எனவே விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
தாலுகா செயலாளர் புவிராஜ், நகர செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர் ராமலிங்கம், சி.ஐ.டி.யு. கிளை தலைவர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் ராஜ்குமார் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிதா ஷெரின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.5½ கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்குள் புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்கப்படும். இங்கு 3 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் ஒரு டாக்டர் இங்கு பணிமாறுதல் செய்யப்பட்டு விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார். விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் இரவில் டாக்டர் தங்கியிருந்து சிகிச்சை அளிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story