நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: நிலப்பிரச்சினையால் விவசாயி, குடும்பத்துடன் தற்கொலை முயற்சி


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: நிலப்பிரச்சினையால் விவசாயி, குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 19 Aug 2019 9:45 PM GMT (Updated: 19 Aug 2019 7:44 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிலப்பிரச்சினையால் விவசாயி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கொண்டு வந்த விஷப்பாட்டிலை தட்டிவிட்டு போலீசார் அவர்களை மீட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ்நாரணவரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 40). இவர் அந்த பகுதியில் சுக்குக்காப்பி கடையும் நடத்தி வருகிறார். இவருடைய குடும்பத்தினர் 3 தலைமுறையாக பயிர் செய்து வருகின்ற நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கிரையம் செய்துவிட்டு அந்த நிலத்தில் இவரை பயிர் செய்யவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முருகன், தனது மனைவி மாலதி, மகள் இசைவாணி, மகன் ஸ்ரீராம் ஆகியோருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், அங்கு தான் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த விஷத்தை குடித்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து விஷப்பாட்டிலை தட்டிவிட்டு அவர்களை மீட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர் கலெக்டரிடம் தனது நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறி மனு கொடுத்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை டவுன் சாலியர் தெரு மக்கள் பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் நயினார்சுந்தரம், ம.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் புக் ரவி, இந்திய கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் நல்லதம்பி, தி.மு.க. மாநில பேச்சாளர் ரவி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள், கலெக்டரிடம் எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.

சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜான்பால்ராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி வெங்கடகிருஷ்ணாபுரம் தெருவை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்று கேட்டு மனு கொடுத்தனர்.

விஜயநாராயணம் பெரியகுளம் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், “விஜயநாராயணம் பெரிய குளத்தை குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வார அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அந்த நிதியில் இருந்து குளத்தின் தடுப்பு சுவரை சரி செய்யவேண்டும். ஆனால், தடுப்பு சுவரை சரி செய்யாமல் கரையில் மண்ணை மட்டும் போட்டு வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. எனவே, தடுப்பு சுவர் கட்டவேண்டும். இல்லை எனில் உண்ணாவிரதம் இருப்போம்“ என்று கூறி உள்ளனர்.

நெல்லை சங்கர்நகர் பண்டாரகுளம் ஊர்மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தங்கள் ஊரில் உள்ள பண்டாரகுளத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குளத்தை மீட்டு தரவேண்டும் என்று மனு கொடுத்தனர். சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் விசுவநாதபுரம் பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அம்மா திட்டமுகாமில் வாங்குகின்ற மனுக்களுக்கு ஓப்புகைச்சீட்டு வழங்கவேண்டும் என்று காமராஜர் சமூக நலபேரவை தலைவர் நற்றமிழன் மனு கொடுத்தார். வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் அருகே தண்ணீர் கொண்டு செல்வதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ரூ.18 லட்சத்தில் போடப்பட்ட சாலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிஞர் அண்ணா பேரவை அமைப்பாளர் வாகை முத்தழகன் மனு கொடுத்தார்.

Next Story