ரூ.3¾ லட்சம் பெற்றுக்கொண்டு போலி பணியாணை கொடுத்து மோசடி கையும், களவுமாக பிடிபட்டும் கண்டுகொள்ளாத போலீசார்


ரூ.3¾ லட்சம் பெற்றுக்கொண்டு போலி பணியாணை கொடுத்து மோசடி கையும், களவுமாக பிடிபட்டும் கண்டுகொள்ளாத போலீசார்
x
தினத்தந்தி 19 Aug 2019 9:30 PM GMT (Updated: 19 Aug 2019 7:45 PM GMT)

அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3¾ லட்சம் பெற்று, போலி பணியாணை கொடுத்து மோசடி செய்தவரை போலீஸ் உதவியுடன் இளைஞர்கள் கையும், களவுமாக பிடித்தது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த போலீசார் கண்டுகொள்ளாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேலூர், 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள நெல்லியாங்குளம் கிராமத்தை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதற்காக இருவரிடமும் அவர் ரூ.3¾ லட்சத்தை கடந்தசில மாதங்களுக்கு முன்பு பெற்றுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு அரசு முத்திரையுடன் கூடிய பணியாணையும் வழங்கி உள்ளார்.

அதில் ஒருவருக்கு செய்யாறில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் எழுத்தர் வேலையும், மற்றொருவருக்கு செய்யாறு கருவூலத்தில் எழுத்தர் வேலையும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவருக்கும் வேலூரில் கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதங்கள் பயிற்சியளிக்கப்பட்ட பின்னர் பணியில் சேரலாம் என்று, பணம் பெற்ற நபர் கூறி உள்ளார்.

இதற்காக அவர்கள் இருவருக்கும் வெள்ளை நிறத்தில் பேண்ட், சட்டை வாங்கிக்கொடுத்துள்ளார். அதை அவர்கள் அணிந்து கொண்டு தினமும் வந்தவாசியில் இருந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தை சுற்றிக்காட்டிவிட்டு, ஒரு நோட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டு ஊருக்கு அனுப்பி விடுவார். அவர்களுக்கு பஸ் கட்டணமாக தினமும் பணம் கொடுத்து வந்துள்ளார்.

2 மாதங்களாகியும் அவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால் அக்கம் பக்கம் விசாரித்தபோது தங்களிடம் பணம் பெற்ற நபர் மேலும் சிலரிடம் இதுபோன்று பணம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த இருவரும் நேற்று தங்கள் தந்தையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் கொடுத்துள்ள பணியாணை போலியானது என்பதும், தாங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனால் பணம் பெற்று மோசடி செய்த நபரைபிடிக்க அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக தாங்கள் இருவரும் வேலூரில் இருப்பதாகவும், வந்து கையெழுத்து பெற்று செல்லுமாறும் போனில் தெரிவித்தனர். அதன்படி அந்த நபரும் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்து இருவரிடமும் நோட்டில் கையெழுத்து பெற்றார். மேலும் இருவருக்கும் தலா ரூ.1000 கொடுத்தார்.

அவரை பிடிப்பதற்காக போலீசாரும் காத்திருந்தனர். அதன்படி அவர் கையெழுத்து பெற்றதும் அவரை பிடித்து மோசடி செய்தது குறித்து கேட்டதும் அவர் பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும், தன்னை விட்டு விடும்படியும் கூறினார். ஆனால் அவரை போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறியதால் போலீசார் இந்த சம்பவத்தை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.

பின்னர் வழக்கறிஞர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று ரூ.50 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை ஒருவாரத்தில் தருவதாகவும் கூறியதால் அவர்கள் சமாதானமாக சென்றுவிட்டனர்.

வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த நபரை போலீஸ் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் தராததால் தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று போலீசார் தெரிவித்தனர். அரசு முத்திரையை பயன்படுத்தி போலியாக பணியாணை கொடுத்த நபரை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பிடித்தும் மாவட்ட நிர்வாகமோ, போலீசாரோ நடவடிக்கை எடுக்காதது, இதுபோன்ற மோசடி நபர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்று அங்கிருந்தவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Next Story