ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகள் அகற்றுவதை எதிர்த்து உண்ணாவிரதம் கடைகள் அடைப்பு


ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகள் அகற்றுவதை எதிர்த்து உண்ணாவிரதம் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதி சதுப்பு நிலம் எனவும், அங்குள்ள குடியிருப்புகளை அகற்றி, அரசு நிலத்தை மீட்கும்படியும் வருவாய்த்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அந்த குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் தாங்கள் 30 ஆண்டுகளாக வசித்துவருவதாகவும், தங்கள் குடியிருப்புகளை அகற்றக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தங்கள் குடியிருப்புகளை அகற்றக்கூடாது, தங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா வழங்கவேண்டும் என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக வணிகர்களும் கடைகளை அடைத்தனர். மீனவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈஞ்சம்பாக்கம் ஏழு கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பெத்தேல்நகர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், பள்ளி மாணவ-மாணவிகள், போராட்டக்குழு நிர்வாகிகள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ., தென் சென்னை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கரிகாலன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

Next Story