மாவட்டம் முழுவதும் 14 வீடுகள் சேதம்: மழை பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்


மாவட்டம் முழுவதும் 14 வீடுகள் சேதம்: மழை பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:00 AM IST (Updated: 20 Aug 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் 14 வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திராநகர், முள்ளிப்பாளையம், திடீர்நகர், மாங்காய்மண்டி மற்றும் காட்பாடி காந்திநகர், கழிஞ்சூர் கிராமம், தாராபடவேடு மருத்துவமனைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

அவற்றை வருவாய்த்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் துரித பணியில் ஈடுபட்டு வெளியேற்றினர். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட இந்திராநகர், கன்சால்பேட்டை பகுதி மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டன.

அரக்கோணம் தாலுகா பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த தன்ராஜ், இச்சிபுத்தூர் காமாட்சி, வாணியம்பாடி தாலுகா வளையாம்பட்டு சந்துரு, மணியாரகுப்பம் ராமமூர்த்தி, பெரியவரிகம் அண்ணாநகர் ராதாம்மாள், ஆம்பூர் தாலுகா மேல்சாணாங்குப்பம் ராஜேஷ், சின்னபள்ளிக்குப்பம் இலங்கை அகதிகள் முகாம் லட்சுமி, மின்னூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், லட்சுமிநகர் குப்பன், நாச்சார்குப்பம் கோவிந்து, குடியாத்தம் கண்ணகிதெரு சீனிவாசன், கொண்டசமுத்திரம் லலிதா, கதிரம்பட்டி மதுராஅகரம் காலனி அம்சா, வாலாஜாபேட்டை நகரம் கல்லூர்பேட்டை துரைமுருகன் ஆகிய 14 பேரின் வீடுகள் மழை காரணமாக சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

வளையாம்பட்டு கிராமம் காலனி தெரு, திருப்பத்தூர் தாலுகா அண்ணாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகர், துத்திப்பட்டு அருகே நரியம்பட்டு கிராமத்தில் முஸ்லிம் தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. பெரியவரிகம் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறையினரை கொண்டு மழைநீர் அகற்றப்பட்டது.

அரக்கோணம் தாலுகா மாம்பாக்கம் கிராமத்தில் உமாநகர் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. நகராட்சி பணியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களை கொண்டு பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. துத்திப்பட்டு பைரப்பள்ளி கிராமத்தில் உள்ள கொண்டன் ஏரிக்கரை உடைந்தது. மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக்கரை சீரமைக்கப்பட்டது.

ஒடுகத்தூர் கே.ஜி.ஏரியூர் கொல்லைமேடு பகுதியில் வசிக்கும் வேலுவின் மகள்கள் பிரித்திகா, ஹரீனா ஆகியோர் சாண எருவிற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி உயிரிழந்தனர். அக்குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆற்காடு தாலுகா கணியனூர் மதுரா டி.புதூர் கிராமத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்தது. அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. மழை அளவு மற்றும் மழை பாதிப்புகள் குறித்து கண்காணிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story