ஜிம்மாண்டியூர், கூச்சானூர் பெரிய ஏரிகளுக்கு கால்வாய் அமைக்க வேண்டும்; கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
பாரூர் ஏரி உபரிநீரை கொண்டு செல்லும் வகையில் ஜிம்மாண்டியூர், கூச்சானூர் பெரிய ஏரிகளுக்கு கால்வாய் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விவேகானந்தன் தலைமையில் வலசகவுண்டனூர், புளியம்பட்டி, சுண்டகாப்பட்டி, விக்கனம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் போச்சம்பள்ளி, கோணனூர் ஏரி, புளியம்பட்டி, திப்பனூர் ஏரி, மத்தூர் , பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு செல்கிறது. இந்த உபரி நீரை போச்சம்பள்ளி கோணனூர் ஏரியில் இருந்து ஜிம்மாண்டியூர் ஏரி, கூச்சானூர் பெரிய ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் புதிய கால்வாய் அமைக்க வேண்டும். இந்த 2 ஏரிகளுக்கும் தண்ணீர் வசதி செய்து தரும் பட்சத்தில் ஏரிகளை சுற்றி உள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பயன் பெறும். மேலும் இந்த ஏரிகளை சுற்றி உள்ள ஜிம்மாண்டியூர் ஊராட்சி, வலசகவுண்டனூர் ஊராட்சி, புளியம்பட்டி ஊராட்சி, குள்ளம்பட்டி ஊராட்சி விவசாயிகள் விவசாயம் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வார்கள். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.
பர்கூர் ஊராட்சி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மயிலம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதற்கு குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைத்து சிறு மின் விசை பம்பு மூலம் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் தார் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story