புதுக்கோட்டை நகரில் தற்காலிக உள்வட்ட சாலை அமைக்கக்கோரி பா.ஜ.க.வினர் மனு


புதுக்கோட்டை நகரில் தற்காலிக உள்வட்ட சாலை அமைக்கக்கோரி பா.ஜ.க.வினர் மனு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:45 PM GMT (Updated: 19 Aug 2019 8:04 PM GMT)

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதுக்கோட்டை நகரில் தற்காலிக உள்வட்ட சாலை அமைக்க வேண்டும் எனக்கோரி பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போது பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 526 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விவசாய கடன் தள்ளுபடி

கூட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராம.தீர்த்தார் கொடுத்த மனுவில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, ஆளும் கட்சியும், எதிர்கட்சியும், தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் வாங்கிய வங்கி மற்றும் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தனர். ஆனால் இதுவரை கடன் தள்ளுபடி குறித்த எந்த ஒரு அறிவிப்புகளும் வரவில்லை.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீளமுடியாத நிலையில் உள்ளனர். எனவே கஜாபுயலின் பாதிப்பினை கருத்தில் கொண்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

உள் வட்ட சாலை

புதுக்கோட்டை நகர பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகரில் மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாகி வருவதால், பண்டிகை காலங்களில் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பால்பண்ணை ரவுண்டானா, நரிமேடு, சமத்துவபுரம், குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு வழியாக தஞ்சாவூர் சாலைக்கு செல்வதற்கு உள்வட்ட சாலை தற்காலிகமாக அமைக்க வேண்டும். நகரில் பழுதடைந்த நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை சரிசெய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Next Story