13 மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தலைமை செயலாளர் தலைமையில் குழு; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


13 மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தலைமை செயலாளர் தலைமையில் குழு; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

13 மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஆலோசிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் அவற்றில் போதிய தண்ணீரை தேக்க முடியவில்லை. பல கண்மாய்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுகள், கழிவுநீர் கலக்கிறது. எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, அவற்றை தூர்வாரி தண்ணீரை தேக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இதே போல் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் நீர்நிலைகள், குளங்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள், வணிகவளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் மழைநீரை சேகரிக்க முடியாமல் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இதே போல் மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, மதுரை ஐகோர்ட்டின் எல்லைக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை பராமரிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் பொதுப்பணித்துறை செயலாளர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட துணை கலெக்டர்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும். அந்த குழு எடுத்துள்ள முடிவுகள் குறித்து விரிவான அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை அக்டோபர் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story