தாகூர் கலைக்கல்லூரியில் மாணவர்கள், பெற்றோர் முற்றுகை போராட்டம்


தாகூர் கலைக்கல்லூரியில் மாணவர்கள், பெற்றோர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:15 PM GMT (Updated: 19 Aug 2019 8:27 PM GMT)

தாகூர் கலைக்கல்லூரியில் நேற்று காலை சேர்க்கைக்காக மாணவர்கள் திரண்டனர். சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டதால் அவர்கள் ஆத்திரம் அடைந்து கல்லூரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கடந்த 13-ம் தேதி சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது தங்களது அசல் சான்றிதழ்களுடன் சென்று சேரலாம் என்று சென்டாக் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இதற்கிடையே கடந்த 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

ஆனால் லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரியில் கடந்த 17, 18-ந் தேதிகளில் மாணவர் சேர்க்கை நடத்தவில்லை. அந்த தேதிகளில் சேர்க்கைக்காக வந்த மாணவர்களுக்கு முன்பதிவுக்கான டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு அவர்களை 19-ந் தேதி (நேற்று) வருமாறு கல்லூரி தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக மாணவர் சேர்க்கை நடைபெறாததால் நேற்று காலை 9.30 மணியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கல்லூரி வளாகத்தின் முன்பு குவிந்தனர்.

ஆனால், கல்லூரி நிர்வாகமோ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. கல்லூரி முதல்வர் விடுமுறை எடுத்திருந்ததால் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி பேராசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்காக 6 மேஜைகள் அமைக்கப்பட்டது. அதில் இருந்த பேராசிரியர்கள் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து அவர்களுக்கு சேர்க்கை வழங்கினர். அப்போது அங்கு குடிநீர் வசதி எதுவும் செய்யப்படவில்லை. மேலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் காத்திருக்க ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து சேர்க்கைக்காக வந்திருந்த மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கல்லூரி ஆடிட்டோரியத்தில் அமர வைக்கப்பட்டனர். அப்போது சேர்க்கை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் நேற்று மதியம் மாணவர் சேர்க்கையை விரைவாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மாணவிகளும் அவர்களது பெற்றோரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு சேர்க்கை வழங்கப்படும். எனவே யாரும் பயப்படத்தேவையில்லை என்று கூறினர். அதன் பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். தொடர்ந்து நேற்று மாலை வரை மாணவர் சேர்க்கை நடந்தது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

Next Story