பருவமழை பொய்த்ததால், குறைந்து வரும் பரப்பலாறு அணை நீர்மட்டம்


பருவமழை பொய்த்ததால், குறைந்து வரும் பரப்பலாறு அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:00 AM IST (Updated: 20 Aug 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் பரப்பலாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைகளின் நடுவே பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 90 அடி ஆகும். நீர் இருப்பு 197.95 மில்லியன் கனஅடியாகும். வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படும். இந்த அணையின் நீரைக் கொண்டு ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதிகளில் விவசாயம் மட்டுமின்றி குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், நீர் வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 52 அடி வரையில், 15 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதுவும் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, விருப்பாட்சி பகுதியின் குடிநீர் தேவைக்காகவே அணையில் இருந்து வினாடிக்கு 3 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பரப்பலாறு அணை நிரம்பினால் சத்திரப்பட்டி பகுதிகளில் விவசாயம் செழித்து காணப்படும். ஆனால் பருநிலை மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே மழை பொய்த்து போனதால் நீர்வரத்து இன்றி அணை நிரம்பவில்லை. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அணையை தூர்வார வேண்டும் என்றனர்.

Next Story