நலவாரியத்துக்கு நிதி ஒதுக்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்துக்கு நிதி ஒதுக்கக்கோரி திண்டுக்கல்லில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகில், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் அமைப்பு சாரா நலவாரியத்துக்கு நிதி ஒதுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் கே.ஆர்.கணேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்துக்கு தமிழக அரசு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். கட்டுமான நலவாரியத்தை போன்று அனைத்து அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களுக்கும் விபத்து மரணத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். புதிய பதிவுக்கு ஆய்வு எனும் பெயரில் நலவாரிய அட்டை வழங்குவதை தாமதம் செய்யக்கூடாது.
அதேபோல் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டு முதல் அமைப்புசாரா நலவாரியத்தின் மூலம் வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை உள்ளிட்ட இதர பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் தாலுகா அளவில் நடைபெறும் நலவாரிய பதிவு புதுப்பித்தல் முகாம் தொடர்பாக சங்கங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். நலவாரிய அலுவலகங்களில் பணிகளை விரைவாக முடிக்க போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும். தொழிலாளர்கள் கொடுக்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் தோல் தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயசீலன், சுமைப்பணி தொழிலாளர் சங்க செயலாளர் பிச்சைமுத்து, ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் முருகேசன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story