வாங்கிய கடனை திரும்ப செலுத்துமாறு கூறிய வங்கி அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழில் அதிபர் கைது


வாங்கிய கடனை திரும்ப செலுத்துமாறு கூறிய வங்கி அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2019 3:15 AM IST (Updated: 20 Aug 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

கடனை திரும்ப செலுத்துமாறு கூறிய வங்கி அதிகாரிகளிடம், துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ரானா பாட்டீயா(வயது 52). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனியார் வங்கி ஒன்றில் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதில், அவர் வாங்கிய கடனுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மாத தவணை செலுத்தி இருந்தார். பின்னர் கடந்த 3 மாதமாக அவர் சரிவர மாத தவணை செலுத்தவில்லை.

இதனால் வங்கி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று இதுகுறித்து கேட்டனர். அப்போது அவர் பணத்தை செலுத்துவதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவர் பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்தநிலையில் அதிகாரிகள் சம்பவத்தன்று மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று பணத்தை செலுத்தும்படி கேட்டனர். அப்போது அவர் வீட்டுக்குள் இருந்த தனது துப்பாக்கியை எடுத்து வந்து அதிகாரிகளை சுட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அதிகாரிகள் அங்கிருந்து உயிரை கையில் பிடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து வெர்சோவா போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரானா பாட்டீயாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது உரிமம் பெற்ற துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Next Story