கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகிப்பதை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியல் - திட்டக்குடி அருகே பரபரப்பு


கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகிப்பதை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியல் - திட்டக்குடி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 4:15 AM IST (Updated: 20 Aug 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை வினியோகம் செய்வதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது. இந்த தண்ணீரை குடித்த குழந்தைகளின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை அதே பகுதியில் உள்ள கொட்டாரம்- செங்கமேடு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை வினியோகம் செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், விஜயா மற்றும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story