ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 12:13 AM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 49 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்து கலெக்டர் அன்புசெல்வனிடம் கொடுத்தனர்.

கடலூர்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி பொதுமக்களிடம் கையெழுத்துகளை பெற்றனர். இந்த கோரிக்கைக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் 49 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.

அந்த மனுவை கலெக்டரிடம் கொடுப்பதற்காக மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். ஊர்வலத்தில் வந்த ஒருவர், 49 ஆயிரம் கையெழுத்து கள் அடங்கிய கோரிக்கை மனுவை ஒரு பெட்டியில் வைத்து சுமந்து வந்தார். ஊர்வலத்தினர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயிலை வந்தடைந்ததும், அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் இருந்த நிர்வாகி பண்ருட்டி மகாலிங்கம்(வயது70) என்பவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாவட்ட செயலாளர் துரை தலைமையில் நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு சென்றனர். அங்கு மனுக்கள் அடங்கிய பெட்டியை கலெக்டர் அன்புசெல்வனிடம் கொடுத்தனர், பெட்டியில் இருந்த மனுவை மட்டும் எடுத்துக்கொடுக்குமாறு கலெக்டர் கூறவே, 49 ஆயிரம் கையெழுத்துகளுடன் கூடிய மனுவை எடுத்து கொடுத்தனர். அந்த மனுவை அரசுக்கு அனுப்பி வைப்பதாக கலெக்டர் அன்புசெல்வன் உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட துணை செயலாளர் குளோப், விருத்தாசலம் நகர செயலாளர் விஜயபாண்டியன், சுந்தர்ராஜா, ஜெயராஜ், காசிலிங்கம், நாகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story