ஈரோடு அருகே வியாபாரி வீட்டில் 62 பவுன் நகைகள் கொள்ளை; திருடர்களை பார்த்து குரைத்த நாய்க்கு கத்திக்குத்து


ஈரோடு அருகே வியாபாரி வீட்டில் 62 பவுன் நகைகள் கொள்ளை; திருடர்களை பார்த்து குரைத்த நாய்க்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 2:55 PM GMT)

ஈரோடு அருகே வியாபாரி வீட்டில் 62 பவுன் நகைகளை கொள்ளையடித்த திருடர்கள், அவர்களை பார்த்து குரைத்த நாயை கத்தியால் குத்தினார்கள்.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள ரகுபதிநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 48). இவர் ஆன்-லைன் மூலம் ரசாயன பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் மனைவி முத்துலட்சுமி (35), மகள்கள் அஸ்வினி (19), அட்சயா (10) ஆகியோரும் சண்முகராஜாவின் தங்கை மகன் வெற்றி (19) என்பவரும் வசித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் வீட்டில் இருந்த அனைவரும் தூங்கச்சென்றனர். சண்முகராஜா, முத்துலட்சுமி, அட்சயா, வெற்றி ஆகியோர் ஒரு அறையில் படுத்து உறங்கினார்கள். அஸ்வினி இன்னொரு அறையில் படுத்து இருந்தார். சண்முகராஜா படுத்து இருந்த அறையில் ஏ.சி. இயங்கிக்கொண்டு இருந்தது.

அதிகாலை 4 மணி அளவில் முத்துலட்சுமியுடன் படுத்திருந்த மகள் அட்சயா எழுந்து குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அவருக்கு தண்ணீர் கொடுப்பதற்காக முத்துலட்சுமி எழுந்து வந்து கதவை திறந்தார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. வெளிப்பக்கமாக கதவு பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் சண்முகராஜாவை எழுப்பினார். அவரும் திறந்து பார்த்தார் முடியவில்லை. எனவே அடுத்த அறையில் உறங்கிக்கொண்டு இருந்த அஸ்வினியை அழைத்தார்கள். பெற்றோரின் குரல் கேட்டு எழுந்த அஸ்வினியும் அவருடைய அறைக்கதவை திறக்க முயன்றார். ஆனால் அந்த கதவும் திறக்க முடியாமல் வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

அவர் அதைப்பற்றி கூறவும் சண்முகராஜா மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பக்கத்து வீட்டினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்கள்.

அவர்களும் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டு ஹாலில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோ கதவுகள் திறந்து இருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சண்முகராஜா மற்றும் அஸ்வினி உள்ளிட்டோர் இருந்த அறைகளை திறந்து விட்டனர்.

சண்முகராஜாவும், முத்துலட்சுமியும் பீரோவை சென்று பார்த்தனர். அதில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்று இருந்தனர்.

இதுகுறித்து அவர் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டின் பக்கத்து வீட்டில் உள்ள நாய் ஒன்று படுகாயத்துடன் வீட்டின் அருகே படுத்து முனகிக்கொண்டு கிடந்தது. நள்ளிரவில் நாயின் குரைப்பு சத்தம் அதிகமாக இருந்தது என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே கொள்ளையர்கள் வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றபோது நாய் குரைத்திருக்கலாம். அதனிடம் இருந்து தப்புவதற்காக கொள்ளையர்கள் அதை கத்தியால் குத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து சண்முகராஜா போலீசாரிடம் கூறும்போது, நள்ளிரவில் அயர்ந்து தூங்கியதால் வெளியில் எந்த சத்தமும் கேட்கவில்லை. நல்ல வேளையாக யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. ஆனால், பீரோவில் இருந்து 62 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 ஆயிரத்தை கொள்ளையடித்துச்சென்று விட்டனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து கூறும்போது, ‘வீட்டின் பூட்டினை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து உள்ளனர். சத்தம் கேட்டு யாரும் வந்துவிடக்கூடாது என்று அறைகளை வெளியில் இருந்தே பூட்டிவிட்டு பீரோவை உடைத்து உள்ளனர்.

பீரோவில் இருந்த நகைகள் குறித்து முழுமையான விவரம் சேகரித்து வருகிறோம். இதுபோல் பணம் எவ்வளவு இருந்தது என்றும் விசாரித்து வருகிறோம். நாயை கொள்ளையர்கள் குத்தியதாக தெரியவில்லை. யாராவது கல் வீசியதில் காயம் அடைந்திருக்கலாம்’ என்றார்கள்.

ஈரோட்டில் ரகுபதிநாயக்கன்பாளையம், பாரதிநகர், சாஸ்திரிநகர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளது. தொடர்ச்சியாக வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளன.

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யாரும் இன்னும் சிக்காத நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story