ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி மோதல் - கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு
ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு, கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை வடக்கு, தெற்கு என 2 மாவட்டங்கள் இருந்தன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிதாக மத்திய மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது மாவட்ட தலைவராக இருந்த குலாம்மொய்தீன் பதவி பறிக்கப்பட்டு மத்திய மாவட்ட தலைவராக சீனிவாசக்குமார் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குலாம்மொய்தீன் தலைமையில் ஒரு அணியாகவும், சீனிவாசக்குமார் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நினைவு நாள் கடைபிடிக்கும் நிகழ்ச்சிகளை தனித்தனி கோஷ்டிகளாக நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக இரு அணியினரும் தனித்தனியாக விழுப்புரம் காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை அருகில் விளம்பர பதாகை வைத்திருந்தனர். நேற்று காலை இவர்கள், ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவை கொண்டாட விழுப்புரம் காந்திசிலை அருகில் தனித்தனியாக திரண்டு வந்தனர்.
அப்போது காந்தி சிலை அருகில் சீனிவாசக்குமார் அணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை மறைத்தபடி குலாம்மொய்தீன் அணியினர் விளம்பர பதாகை வைத்திருந்ததை பார்த்த சீனிவாசக்குமார் அணியினர் அந்த விளம்பர பதாகையை அகற்றி விட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை நடத்தினர். இதையடுத்து குலாம்மொய்தீன் அணியினர் அருகே உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தனர்.
பின்னர் சீனிவாசக்குமார் அணியினர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க தயாராக இருந்தனர். ஆனால் அவர்களை வர விடாமல் தடுப்பு ஏற்படுத்தும் வகையில் குலாம்மொய்தீன் அணியை சேர்ந்தவர்கள் ராஜீவ்காந்தி சிலை அருகில் நீண்ட நேரம் நின்றுகொண்டு நிகழ்ச்சியை நடத்தினர். இதனால் இரு அணியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
அதன் பிறகு ஒருவழியாக நிகழ்ச்சிகள் முடிவடைந்து இரு அணியினரும் அங்கிருந்து கலைந்து செல்லும்போது, சீனிவாசக்குமார் அணியினரிடம் குலாம்மொய்தீன் அணியினர் சென்று எங்கள் தரப்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு செல்லுமாறு கூறினர். இதனால் இரு அணியினருக்கும் தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது.
இதில் இரு அணியை சேர்ந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஒருவருக்கொருவர் நெட்டி தள்ளிக் கொண்டு கைகலப்பிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இரு கோஷ்டிகளையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
Related Tags :
Next Story