அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா அரசுக்கு சிக்கல்
மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால், முதல்-மந்திரி எடியூரப்பா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால், முதல்-மந்திரி எடியூரப்பா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிக்கல் ஏற்படும்
கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த மாதம்(ஜூலை) 26-ந் தேதி பதவி ஏற்றார். 25 நாட்களுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. புதிதாக 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். மந்திரிசபை விரிவாக்கத்தில், மூத்த எம்.எல்.ஏ.க்களான உமேஷ்கட்டி, பாலச்சந்திர ஜார்கிகோளி, ரேணுகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவர்கள் யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினராகவோ இல்லாத, கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த லட்சுமண் சவதிக்கு மந்திரி பதவி கிடைத்திருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. மந்திரி பதவி கிடைக்காத பாலச்சந்திர ஜார்கிகோளி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் எடியூரப்பா அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால், சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அரசை கவிழ்ப்போம்
முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது இதே பாலச்சந்திர ஜார்கிகோளி, ரேணுகாச்சார்யா போன்ற எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி நெருக்கடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வடகர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பாலச்சந்திர ஜார்கிகோளி, நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் எடியூரப்பா அரசை கவிழ்ப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மந்திரிசபையில் 16 இடங்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. அதனால் யார் போர்க்கொடி தூக்கினாலும் அவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி சமாளிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
முரளிதரராவ் ஆலோசனை
ஆனால் மூத்த எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர் பதவியை ஏற்கும் மனநிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவை டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் நேரில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். அதிருப்தியாளர்களை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும், இதை வளர விடக்கூடாது என்றும் முரளிதரராவ், எடியூரப்பாவிடம் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் அதிருப்தியில் உள்ள பாலச்சந்திர ஜார்கிகோளியை, எடியூரப்பா தனது வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்றும், சிறிது காலம் பொறுமை காக்கும்படியும் கூறியதாக தெரிகிறது. மந்திரி பதவி கிடைக்காததால் உமேஷ்கட்டி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரியில் சாலையில் டயர்களை போட்டு எரித்து போராட்டம் நடத்தினர். எடியூரப்பாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் தடியடி
அதேபோல் சித்ரதுர்காவில் 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திப்பாரெட்டிக்கு மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எடியூரப்பாவை கண்டித்து அவரது ஆதரவாளர்கள், சித்ரதுர்காவில் சாலையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். டயர்களையும், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தினர். எடியூரப்பாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கும் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி, போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அதே போல் கூளிஹட்டி சேகர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் ஒசதுர்காவில் சாலையில் டயர்களை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பயப்பட தேவை இல்லை
இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களை பா.ஜனதா கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக கூறி புலம்பியதாக தெரிகிறது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.ல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர் ஆகியோரை புதிய மந்திரி லட்சுமண் சவதி பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் லட்சுமண் சவதி, ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் பயப்பட தேவை இல்லை, உங்களுக்கான மரியாதையை வழங்க பா.ஜனதா தயாராக இருக்கிறது‘ என்று கூறி உறுதியளித்தார் என்று சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story