அம்மையநாயக்கனூரில், குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கொடைரோடு,
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள இடையபட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடும் வறட்சி காரணமாக அப்பகுதியில் உள்ள 4 ஆழ்துளை கிணறுகள் வறண்டன. தற்போது ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடநீர்கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக பேரூராட்சி அலுவலகத்துக்கு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்தபோது பலத்த மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே வந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
Related Tags :
Next Story