தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் தவறு செய்யவில்லை எனில் குமாரசாமி பதற்றப்படுவது ஏன்? ஷோபா எம்.பி. கேள்வி
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் தவறு எதுவும் செய்யவில்லை எனில் குமாரசாமி எதற்காக பதற்றப்படுகிறார்? என்று ஷோபா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
உடுப்பி,
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் தவறு எதுவும் செய்யவில்லை எனில் குமாரசாமி எதற்காக பதற்றப்படுகிறார்? என்று ஷோபா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏன் பதற்றப்படுகிறார்?
உடுப்பியில் நேற்று பா.ஜனதாவைச் சேர்ந்த ஷோபா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி வருகிறார். அப்படியானால் அவர் சந்தோஷமாகத்தானே இருக்க வேண்டும். பின்னர் ஏன் பதற்றப்படுகிறார்?. அதுபோல முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தார்கள் என்பது விசாரணையில் தெரியவரும். ஒருவேளை யாரும் இந்த விவகாரத்தில் தவறு செய்யவில்லை என்றால் கர்நாடக அரசியல் தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
தலையிட விரும்பவில்லை
முதல்-மந்திரி எடியூரப்பா, தனது மகன் விஜயேந்திராவை தன்னுடைய அரசியல் வாரிசாக கொண்டு வருவாரா? என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். ஆனால் அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வளர்ச்சிப் பணிகளை கவனித்து வருகிறேன். மேலும் நாடாளுமன்றத்துக்கும் சென்று வருகிறேன்.
அதனால் இந்த விஷயத்தில் நான் தலையிட விரும்பவில்லை. என்னுடைய தொலைபேசியையும் யாரும் ஒட்டுக்கேட்டால் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் நான் கட்சிக்கோ, ஆட்சிக்கோ, மக்களுக்கோ, தேசத்துக்கோ துரோகம் செய்யவில்லை.
அதிருப்தி அடைய வேண்டாம்
மந்திரி பதவி யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது ரகசியமாக வைக்கப்பட்ட விஷயம். அது முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கும், கட்சி மேலிடத்திற்கும் மட்டுமே தெரிந்த விஷயம். முதலில் எடியூரப்பா மந்திரி பதவிக்கு தேர்வானவர்களின் பட்டியலை கட்சி மேலிடத்திடம் கொடுத்தார். அதை வைத்து கட்சி மேலிட தலைவர்கள் மந்திரி பட்டியலை இறுதி செய்தனர். அதனால் இதில் யாரும் ஆதங்கப்படவோ, அதிருப்தி அடையவோ வேண்டாம்.
கட்சி மேலிடத்தின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இன்னும் மந்திரி பதவிகள் நிரப்பப்பட வேண்டி உள்ளது. அதனால் தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்று யாரும் அதிருப்தி அடைய வேண்டாம்.
நிவாரண பணிகளை...
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரிகள் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர். மேலும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விரைவில் நிவாரண நிதியை வழங்கும். நான் மத்திய மந்திரிசபையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தேன் என்று சிலர் கூறி வருகிறார்கள். அது தவறு. என் மீது அவதூறு பரப்ப அவர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு ஷோபா எம்.பி. கூறினார்.
Related Tags :
Next Story