தாமதமாக வந்ததால் கல்லூரி வளாக தோட்டத்தை சுத்தம் செய்த மாணவர்கள் - பச்சையப்பன் கல்லூரி முயற்சி


தாமதமாக வந்ததால் கல்லூரி வளாக தோட்டத்தை சுத்தம் செய்த மாணவர்கள் - பச்சையப்பன் கல்லூரி முயற்சி
x
தினத்தந்தி 21 Aug 2019 3:45 AM IST (Updated: 21 Aug 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கையை கண்காணிக்க, கல்லூரி முதல்வர் பி.அருள்மொழி செல்வன் தலைமையில் பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

175 ஆண்டுகளை கடந்து பாரம்பரியமிக்க கல்லூரியாக விளங்குவது பச்சையப்பன் கல்லூரி ஆகும். இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கையை கண்காணிக்க, கல்லூரி முதல்வர் பி.அருள்மொழி செல்வன் தலைமையில் பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் மாணவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர். இவர்களுடன் போலீசாரும் இருப்பார்கள். அந்த வகையில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்கு தாமதமாக வந்தனர்.

சமூக அக்கறையையும், நல்லொழுக்க மாண்பையும் வளர்க்கும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தாமதமாக வந்த மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் அருள்மொழி செல்வன் பேசி, கல்லூரி வளாக தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தினார். இது மாணவர்களின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் கல்லூரி மீதுள்ள நலனை வளர்க்க உதவும் வகையில் அமைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story