கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தி ‘மந்திரி பதவி கிடைக்காததால் மனவருத்தம் அடைந்துள்ளேன்’ திப்பா ரெட்டி எம்.எல்.ஏ. பேட்டி
மந்திரி பதவி கிடைக்காததால் மனவருத்தம் அடைந்துள்ளேன் என்றும், முதல்-மந்திரி எடியூரப்பா மீதும், கட்சி மேலிடத்தின் மீதும் அதிருப்தியில் இருக்கிறேன் என்றும் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான திப்பா ரெட்டி கூறினார்.
சித்ரதுர்கா,
மந்திரி பதவி கிடைக்காததால் மனவருத்தம் அடைந்துள்ளேன் என்றும், முதல்-மந்திரி எடியூரப்பா மீதும், கட்சி மேலிடத்தின் மீதும் அதிருப்தியில் இருக்கிறேன் என்றும் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான திப்பா ரெட்டி கூறினார்.
திப்பா ரெட்டி எம்.எல்.ஏ.
கர்நாடக முதல்-மந்திரியாக கடந்த மாதம்(ஜூலை) எடியூரப்பா பதவி ஏற்றார். இந்த நிலையில் எடியூரப்பா தலைமையிலான மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிய மந்திரிகளாக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா உள்பட 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த சித்ரதுர்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திப்பா ரெட்டி மந்திரிசபையில் தனக்கு இடம் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.
எடியூரப்பா மீதும், கட்சி மேலிடம் மீதும் அதிருப்தி அடைந்துள்ள அவர் பெங்களூருவில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஒரு முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி திப்பா ரெட்டி எம்.எல்.ஏ. சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சிக்கு எதிராக செயல்பட்டதில்லை
நான் கடந்த 50 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். இதில் 6 முறை எம்.எல்.ஏ.வாகி உள்ளேன். கடந்த 17 வருடங்களாக சித்ரதுர்கா மாவட்டத்தில் ஒருவருக்கு கூட மந்திரி பதவி வழங்கப்படவில்லை. சித்ரதுர்கா மாவட்டத்தில் எந்தவொரு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தவறும் இதுவரை நடந்ததில்லை. கட்சியில் தலைவர்களுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் நான் இதுவரையில் செயல்பட்டதில்லை.
கட்சியின் உண்மையான தொண்டனாக நான் இருந்து வருகிறேன். கட்சி சோதனையான காலங்களை சந்தித்தபோது நான் சித்ரதுர்கா மாவட்டத்தில் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தி வெற்றி தேடித்தந்தேன்.
கையேந்தும் அவசியம் இல்லை
நான் 6 முறை எம்.எல்.ஏ.வாகி சாதி, மத பேதமின்றி மக்களுக்காக சேவை செய்து வந்துள்ளேன். அதை மக்கள் நன்றாக அறிவார்கள். அதனால் இந்த முறை எனக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு மந்திரி பதவி கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. மக்களின் நலனுக்காக நான் வேறொருவரிடம் சென்று கையேந்தும் அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில் நான் பா.ஜனதா கட்சியில் மூத்த தலைவராக வலம் வருகிறேன்.
இருப்பினும் எனக்கு மந்திரி பதவி வழங்காததால் மனவருத்தம் அடைந்துள்ளேன். இந்த வேளையில் நான் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கும், கட்சி மேலிடத்திற்கும் ஒரு தகவலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆலோசனை கூட்டம்
மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் சேர்ந்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். அதில் ஒரு முக்கிய முடிவும் எடுக்க இருக்கிறோம். அதனால்தான் நான் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளேன். என்னுடைய மன வலி கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், கட்சி மேலிடத்திற்கும் தெரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story