திருமங்கலம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்பது வதந்தி - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


திருமங்கலம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்பது வதந்தி - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 21 Aug 2019 5:15 AM IST (Updated: 21 Aug 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் சூழ்நிலை தற்போது இல்லை என்றும், அது தொடர்பான செய்திகள் வதந்தி என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருமங்கலம்,

திருமங்கலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி ஆணையர் காளிதாஸ், திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் தனலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைப்பு சாரா நல வாரியம் 17 எண்ணம் உள்ளன. நலவாரிய உறுப்பினர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 110 விதியின்கீழ் முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். ஆதரவற்றோர் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை பிரித்து திருமங்கலத்தை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் வருவது வதந்தி. அதனை நம்ப வேண்டாம். அதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. பெரிய மாவட்டங்கள் தான் நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் திருமங்கலம் பகுதியில் நடந்த புதிய நிழற்குடை திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்துகொண்டார்.

இதேபோல் டி.கல்லுப்பட்டி அருகே வையூர் கிராமத்தில் ரூ.31½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு கால்நடை மருந்தகத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில் கால்நடை துறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story