கோவை அரசு ஆஸ்பத்திரியில், 8 கைதிகள் திடீர் உண்ணாவிரதம்


கோவை அரசு ஆஸ்பத்திரியில், 8 கைதிகள் திடீர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 8 கைதிகள் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவையில் உள்ள மத்திய சிறையில் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போது சிகிச்சை அளிக்க சிறை வளாகத்துக்கு உள்ளேயே ஆஸ்பத்திரி உள்ளது.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் சிகிச்சை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கும். இங்கு அதிகபட்சமாக 10 கைதிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கலாம்.

இந்த நிலையில் பல்வலி, உடல்நலக்குறைவு உள்பட நோய்களுக்காக சிகிச்சை பெற 8 கைதிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அத்துடன் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே அந்த கைதிகளுக்கு டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவில் இருந்து அந்த 8 கைதிகளும் சாப்பிடாமல் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று மதியம் ஒரு மணி வரை நீடித்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கோவை மத்திய சிறை உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், இனிமேல் டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிப்பார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கைதிகள் 8 பேரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, மதிய உணவை சாப்பிட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

Next Story