நீலகிரியில், 20 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்


நீலகிரியில், 20 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 7:17 PM GMT)

நீலகிரியில் 20 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக எருமாட்டில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா எருமாட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. ராஜ்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள இன்னும் காலதாமதம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அரசு அலுவலர்களும், ஊழியர்களும் திறம்பட பணியாற்றினர். மேலும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தனர். இதனால் வெள்ள பாதிப்பு துயரங்களில் இருந்து விரைவில் விடுபட்டுள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் உயர் சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் 20 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள் ளது. ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரூ.250 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் கூடுதலாக ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிதியும் விரைவில் வந்த உடன் அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெறும். மக்கள் மீது அரசும், மாவட்ட நிர்வாகமும் அக்கறை கொண்டுள்ளது. சோதனை வரும் சமயத்தில் அனைவரும் ஒன்றிணைந்ததால் கேரளாவை விட நாம் மீண்டும் எழ முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் 77 பேருக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 860 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, அரசு போக்குவரத்து கழக மேலாளர் ராஜ்குமார் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story