தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிப்பது போல் நடித்து மணல் திருடும் ஆசாமிகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிப்பது போல் நடித்து மணல் திருடும் ஆசாமிகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2019 4:30 AM IST (Updated: 21 Aug 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிப்பது போல் நடித்து சில ஆசாமிகள் மணல் திருடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரம்,

தாராபுரம் பகுதியில் திருட்டு மணல் தாராளமாக கிடைக்கிறது. இதை இங்குள்ளவர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள். காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சமூக விரோத கும்பல் ஒன்று பெரமியம் அருகே அமராவதி ஆற்றில், அனுமதியின்றி மணல் குவாரி அமைத்து, பல 100 யூனிட் அளவிற்கு மணலை திருடி, அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் லாரிகளில் ஏற்றிச்சென்று விற்பனை செய்து கொண்டிருந்தது. இந்த மணல் திருட்டை சமீபத்தில் தான் அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார்கள். அமராவதி ஆற்றில் மணல் திருடுவோருக்கு பெரிய தண்டனை எதுவும் கிடையாது. அதனால் தான் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தகவல் கிடைத்தால் அனுமதியின்றி மணல் எடுத்துச்செல்லும் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத்தொகை ரூ.25 ஆயிரம் தான். ஒரு லாரி திருட்டு மணல் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஒரு குழுவினர் குறைந்தது 5 லாரி மணலை திருடி விற்பனை செய்கிறார்கள். மணல் திருடர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் என்பது, பெரிய தொகை இல்லை. எனவே தான் இந்த பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் சில நாட்களுக்கு முன்பு பழைய ஹவுசிங் யூனிட் அருகே சுமார் 45 யூனிட் திருட்டு மணல் குவித்து வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய் தனர். தற்போது அமராவதி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், மணலை திருடி லாரிகள் மற்றும் டிராக்டர்களில் எடுத்துச் செல்ல முடிவதில்லை. இதனால் மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில ஆசாமிகள் அமராவதி ஆற்றில் குளிப்பது போல் நடித்து பிளாஸ்டிக் சாக்கு மூடைகளில் மணலை திருடி, மொபட்டுகளில் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். ஒரு மூடை மணல் ரூ.80-லிருந்து ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணல் திருட்டு, நகர் பகுதியில் புதிய ஆற்றுப்பாலம், கொளிஞ்சிவாடி, அலங்கியம், ஆத்துக்கால்புதூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story