பால்வளத்துறை பற்றி ஆட்சியாளர்களிடம் முரண்பட்ட கருத்து: எது உண்மை? எது பொய்? என பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் நெல்லையில் மு.க.ஸ்டாலின் பேட்டி


பால்வளத்துறை பற்றி ஆட்சியாளர்களிடம் முரண்பட்ட கருத்து: எது உண்மை? எது பொய்? என பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் நெல்லையில் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 21 Aug 2019 4:30 AM IST (Updated: 21 Aug 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

பால் வளத்துறை பற்றி ஆட்சியாளர்கள் முரண்பட்ட கருத்தை தெரிவிக்கிறார்கள். எது உண்மை? எது பொய் என விளக்க வேண்டும் என்று நெல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நெல்லை,

பால் வளத்துறை பற்றி ஆட்சியாளர்கள் முரண்பட்ட கருத்தை தெரிவிக்கிறார்கள். எது உண்மை? எது பொய் என விளக்க வேண்டும் என்று நெல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலின் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளையொட்டி, பாளையங்கோட்டையில் நெல்லை கோர்ட்டு எதிரே அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரண்டாயிரம் பேர் கொண்ட பெரும்படையுடன் வந்த ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரானை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றவரும், இந்திய விடுதலை போராட்டத்துக்கு வித்திட்டவர்களுள் ஒருவருமான மாவீரன் ஒண்டிவீரனின் 248-வது நினைவு நாளான இன்று (அதாவது நேற்று) அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

சாதி பேதமின்றி வாழ்ந்த மாவீரன் ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டன. ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை உடனடியாக ஏற்று பாளையங்கோட்டையில் நெல்லை கோர்ட்டு எதிரே 63.38 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. தலைவர் கலைஞர், ஒண்டிவீரன் உருவச்சிலை அமைக்கவும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கினார். 18-1-2011 அன்று அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்த மறைந்த பரிதி இளம்வழுதி அடிக்கல் நாட்டினார். அந்த உரிமையோடு ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்தேன்.

3 சதவீதம் இட ஒதுக்கீடு

அடித்தட்டு மக்களுக்கு ஒரு விடிவு காலத்தை உருவாக்கிட வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் கலைஞர், அருந்ததியினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பிலும் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அவருக்கு உடல்நலம் சரியில்லை. அப்போது நான் துணை முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்தேன். இந்த தீர்மானத்தை நானே சட்டசபையில் தாக்கல் செய்து சட்டமாக்கி அரசாணை வெளியிட்டேன். அந்த பெருமையோடு ஒண்டிவீரனுக்கு மாலை அணிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

பால் விலை உயர்வு

கேள்வி:- பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்:- பொதுமக்களுக்கு பால் வார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த அரசு பால் விலையை உயர்த்தி அவர்களின் வயிற்றில் அடிக்கிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி இருக்கிறோம். அதனால் தான் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்று கூறினார்கள். பால் கொள்முதல் செய்பவர்களுக்கும், பொதுமக்களிடையேயும் இந்த அரசு பிரிவினையை உண்டு பண்ணுகிறது. பால்வளத்துறையை பொறுத்தவரையில் லாபத்தில் இயங்குவதாக கூறுகிறார்கள். நஷ்டத்தில் இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அவர்களுக்குள் முரண்பாடு இருக்கிறது. எது உண்மை? எது பொய்? என பொதுமக்களுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

கேள்வி:- நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா?

பதில்:- தேர்தல் தேதி அறிவித்தவுடன், உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

துண்டுசீட்டு

கேள்வி:- துண்டுசீட்டு இல்லாமல் உங்களால் பேச முடியாது என பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகிறார்களே?

பதில்:- அவர்கள் சொல்வதை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. பா.ஜனதாவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். நான் அப்படி பேச மாட்டேன். புள்ளி விவரத்துடன், சரியாக பேச வேண்டும் என விரும்புவேன். அதற்காக தான் குறிப்பு எடுத்து துண்டுசீட்டோடு பேசுகிறேன்.

கேள்வி:- மாவட்டங்களை பிரிப்பது நிர்வாக வசதிக்காக என்று கூறுகிறார்களே?

பதில்:- ஆட்சியாளர் செய்யும் லஞ்சம், லாவண்யத்தை மறைக்க மாவட்டத்தை பிரிக்கிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கண்டுகொள்வது இல்லை.

கேள்வி:- இந்தியாவில் நீங்கள் 3-வது பெரிய கட்சி. தேசிய அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறீர்களா?

பதில்:- நாடாளுமன்றத்தை பொறுத்த வரையில் தி.மு.க. உறுப்பினர்கள் மட்டும் அல்ல, கூட்டணி கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பார்கள். இது இன்று மட்டும் அல்ல, கலைஞர் காலத்திலும், பேரறிஞர் அண்ணா காலத்திலும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது பாரதீய ஜனதா காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

வரவேற்பு

முன்னதாக அவருக்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தலைமையில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, கீதாஜீவன், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ஜோயல், மாவட்ட செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன் (கிழக்கு), அப்துல்வகாப் (மத்திய மாவட்டம்), சிவபத்மநாதன் (மேற்கு), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா, ராதாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நெசவாளர் அணி மாநில செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story