பொதுத்துறை நிறுவனமாக மாற்ற எதிர்ப்பு, வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது


பொதுத்துறை நிறுவனமாக மாற்ற எதிர்ப்பு, வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 21 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே உள்ள வெடிமருந்து தொழிற் சாலையை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னூர்,

இந்தியா முழுவதும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 வெடிமருந்து தொழிற்சாலைகள் கொல்கொத்தாவில் உள்ள பாதுகாப்பு வாரியத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கார்கில் போர் உள்பட பல்வேறு போர்களுக்கு இங்கிருந்து தான் வெடி மருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் 41 வெடி மருந்து தொழிற்சாலைகளையும் பொதுத்துறை நிறுவனமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சாலையில் வேலை பார்த்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், பேரணி சென்றனர். மேலும் இதனை கண்டித்து 20-ந் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 19-ந் தேதி வரை ஒரு மாத காலம் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதையடுத்து தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுடன் நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனைதொடர்ந்து குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் நேற்று முதல் ஒரு மாத வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. வெடிமருந்து தொழிற்சாலையின் வளாகத்தில் இருந்து காந்தி கேட் வரை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பேரணியாக வந்தனர். பின்னர் காந்தி கேட்டில் தொழிற்சங்க போராட்ட கூட்டு குழுவின் சார்பில் வாயில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்திற்கு டி.எப்.எல்.யு. தொழிற்சங்க நிர்வாகி சிவக்குமார் தலைமை தாங்கி னார். சி.எப்.எல்.யு. தொழிற்சங்க தலைவர் அசோகன், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலிப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில அமைப்பு செயலாளர் பாலசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பத்ரி, விவசாய சங்க மாநில துணைத்தலைவர் வாசு ஆகியோர் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் பொதுத்துறை நிறுவனமாக மாற்றம் செய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனத்துக்கு மாற்றும் முடிவை மத்திய அரசு கை விடாவில் உண்ணாவிரதம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், திலிப் குமார் ஆகியோர் கூறினர்.

Next Story